நீர் நிலைகளில் கலக்கும் சாய, சலவை, கழிவுநீர்சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்


நீர் நிலைகளில் கலக்கும் சாய, சலவை, கழிவுநீர்சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்


ஈரோடு:நீர் நிலைகளில் சாய, சலவை, கழிவு நீர் நேரடியாக கலப்பதால், சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வலியுறுத்தப்பட்டது.
ஈரோட்டில், வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் ஆர்.டி.ஓ., ரவி தலைமையில் நடந்தது. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அமுதா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், தமிழக ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் பேசியதாவது: ஈரோடு பகுதியில் சாய, சலவை, தோல் ஆலை கழிவும், மாநகர கழிவு நீரும் சுத்திகரிப்பு செய்யாமல், காளிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கிறது. பொதுப்பணித்துறையின் பேபி வாய்க்கால் துார்வாரி சுத்தம் செய்யாததால், கழிவு நீர் தனியாக பிரிந்து செல்ல வழி இல்லை. கழிவு நீரை நேரடியாக கலக்காமல், சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாததால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கேன்சர், எலும்பு பாதிப்பு நோய், தோல் நோயால் பாதிக்கின்றனர்,இவ்வாறு பேசினார்.
ஈரோடு, 46 புதுாரில் விளை நிலங்கள், பிற பயன்பாட்டுக்கான நிலங்கள் உள்ளன. சாலையை ஆக்கிரமித்து, வேலி அமைத்துள்ளதால் விவசாயம் செய்ய இயலவில்லை. மக்கள் பாதிப்பதால், அதனை அளவீடு செய்து அகற்ற வேண்டும் என, தெய்வசிகாமணி என்பவர் மனு வழங்கினார்.
மொடக்குறிச்சி தாலுகா, துய்யம்பூந்துறை கண்டிகாட்டுவலசில், கொப்பு வாய்க்காலில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு, மரங்களை அகற்ற வேண்டும் என, சுப்பிரமணியம் மற்றும் சிலர் மனு வழங்கினர்.
இவைகள் உட்பட, 30க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த துறையினருக்கு ஆர்.டி.ஓ., ரவி உத்தரவிட்டார்.

Advertisement