100 நாள் வேலை திட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம்


100 நாள் வேலை திட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம்


பு.புளியம்பட்டி:பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டத்தில் கிராமப்புற ஏழை மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, நடப்பாண்டில் மூன்று மாதங்களை கடந்தும் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி நேற்று நொச்சிக்குட்டை பஞ்.,அலுவலகம் முன், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'கிராமப்புற ஏழை மக்களாகிய நாங்கள், 100 நாள் வேலை திட்டத்தில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம். இதை நம்பி மைக்ரோ பைனான்சில் கடன் வாங்கியுள்ளோம். மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால், தவணை தொகை செலுத்த முடியவில்லை. உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும்,'என்றனர்.
பேச்சுவார்த்தை நடத்திய பவானிசாகர் பி.டி.ஓ., விஜயலட்சுமி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement