பள்ளிகளில் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூர்: க.பரமத்தி அருகில் உள்ள, பவித்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மாணவ, மாணவியருக்கு மின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.


மின்வாரிய உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளியில், பொது இடங்களில் உள்ள மின் கம்பிகள் மற்றும் சர்வீஸ் ஒயர்கள் அறுந்து கிடந்தால் அதனை தொடவோ, மிதிக்கவோ, கையால் பிடிக்கவோ கூடாது. விளையாடும் போது பந்து, பட்டம் உள்பட பொருட்கள் மின்மாற்றி, மின் கம்பம், ஒயர்களில் மாட்டிக் கொள்ளும் போது கை, கம்பி, குச்சியால் எடுக்க முயற்சி செய்யக் கூடாது.மின்மாற்றி, கம்பம், இழுவை கம்பி அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது. வீடுகள், பள்ளிகள், பொது இடங்களில் ஈரம் நிறைந்த கைகளால் சுவிட்ச்களை இயக்கக் கூடாது. பஸ் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தால், மின்கம்பிகளை தொடுவதற்கு வாய்ப்புள்ளது. அந்த தவறை செய்ய வேண்டாம். மழை காலங்களில் இடி, மின்னலின் போது மரத்தின் அடியில், மின்மாற்றி, மின் கம்பங்கள் அருகில் நிற்கக் கூடாது. மின் மோட்டார், அயர்ன் பாக்ஸ், வாளியில் செருகும் வாட்டர் ஹீட்டர் ஆகியவை மின் இணைப்பில் இருக்கும்போது, கையால் தொடக்கூடாது என அறிவுரைகளை மின்வாரியத்தினர் வழங்கினர்.இதுபோல, மாயனுாரில் அரசு பள்ளி, கரூர் காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், மின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Advertisement