குகைக்குள் 'டிரெக்கிங்': ஒடிசா அரசு அறிமுகம்

சம்பல்பூர்: ஒடிசாவின் பீமா மண்டலி பகுதியில் உள்ள 30,000 ஆண்டுகள் பழமையான குகைகளுக்கு டிரெக்கிங் செல்லும் வசதியை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தில் மஹாநதியின் கரையோரம் 350 சதுர கிலோ மீட்டர் பரப்பில் டெப்ரிகர் சரணாலயம் உள்ளது. இதன் அருகே ஹிராகுடா அணையும் அமைந்துள்ளது. இவற்றை ஹிராகுடா வனத்துறையினர் பராமரிக்கின்றனர்.
இங்கிருந்து இரண்டு மணி நேரம் பயணித்தால் பழங்கால குகைகள் உள்ள பீமா மண்டலி பகுதி வரும். இந்த குகையை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர், இவை 30,000 ஆண்டுகள் பழமையானவை என்பதை உறுதிப்படுத்தினர்.
இந்த குகைகளில் மான், யானை ஆகிய விலங்குகளின் சிற்பங்கள், பல்வேறு விலங்குகளின் கால் தடங்கள், தேன்கூடு வடிவங்கள் ஆகியவை சித்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலா பயணியர் சிரமமின்றி பார்வையிட புதிய சுற்றுலா திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியது. இதை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
இந்த சுற்றுலா, டெப்ரிகர் சரணாலயம் துவங்கி பீமா மண்டலி குகைகள் வரையிலான ஒரு நாள் பயண திட்டமாகும். இதில் ஹிராகுடா அணை, சமலேஸ்வரி கோவில், சம்பல்பூர் உயிரியல் பூங்கா ஆகியவற்றை காணலாம். இதில் இயற்கையை ரசிப்பதுடன், 1 கி.மீ., குகைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் டிரெக்கிங் செய்யலாம்.
கடந்த ஆண்டு டெப்ரிகருக்கு 70,000 சுற்றுலா பயணியர் வந்தனர். அவர்களில் 40,000 பேர் வெளிமாநிலத்தவர்கள் மற்றும் சிலர் வெளிநாட்டினர். புதிய சுற்றுலா திட்டத்தால் பயணியர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
