விக்டோரியா எட்வர்ட் மன்ற முறைகேடுகள்; முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண வலியுறுத்தல்

மதுரை; 'மதுரை விக்டோரியா எட்வர்ட் மன்ற முறைகேடுகளை அரசு அதிகாரிகள் முறையாக விசாரிக்காமல் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்' என மன்ற மீட்பு இயக்க துணைத் தலைவர் சுப்பையா மனு அளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு: விக்டோரியா எட்வர்ட் மன்ற முறைகேடுகளை மாவட்ட நிர்வாகம் விசாரித்து, நிர்வாகம் கலைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்குப் பதிவு செய்து அரசாணையை ரத்து செய்தனர்.

புகார்கள் சென்றதால் மறுவிசாரணை நடத்தப்பட்டது. இதில் பிறப்பித்த அரசாணைகளையும் நீர்த்துப் போகச் செய்கின்றனர்.

இவ்வாறு அரசாணைகள் தோல்வியடைவது மன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இரண்டு ஆண்டுகளாக விசாரணை மேற்கொள்ளாதது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. முறைகேடுகளை விசாரிக்க அதிகாரியை நியமிக்க வேண்டும். முன்னாள் நிர்வாகிகள் அள்ளிச்சென்ற ஆவணங்கள், பதிவேடுகள், வங்கிப் பணத்தை மீட்க பதிவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது புதிராக உள்ளது.

உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது பதிவுத்துறை தலைவர் பதில் மனுத்தாக்கல் செய்யாதது பற்றி விசாரிக்க வேண்டும்.

பணத்தை கையாடல் செய்தது குறித்த தனி அலுவலரின் புகாரின் பேரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தும் நடவடிக்கை இல்லை. நகரின் மத்தியில் 1.87 ஏக்கர் நிலத்தை விக்டோரியா மன்றம் நிபந்தனையை மீறி கையாடல் செய்ததால் அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர்கள் அனுப்பிய பரிந்துரை மீதும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அனைத்துத் துறைகளும் அரசாணைக்கு எதிராக செயல்படுகின்றன. இப்பிரச்னையில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement