கோயில் விழாவில் 431வது ஆண்டாக நாடகம்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெயில் உகந்த அம்மன் மாசி உற்ஸவ பொங்கல் விழாவின் உச்சநிகழ்ச்சியில் 431வது ஆண்டாக மதுரை வலையங்குளம் திருமலை மெச்சனார் குடும்பத்தினர் சார்பில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் நடந்தது.
கோயிலில் உற்ஸவ விழா பிப். 18ல் தொடங்கியது. நேற்று முன்தினம் சட்டத்தேரில் அம்மன் எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் முடிந்து கோயில் முன்பு சட்டத்தேர் நிறுத்தப்பட்டது. இரவு 11:00 மணி முதல் நேற்று அதிகாலை 5:00 மணி வரை கோயில் முன்பு நாடகம் நடந்தது.
அக்குடும்பத்தைச் சேர்ந்த கண்ணன் கூறியதாவது: ஏழாவது தலைமுறையாக நாடகம் நடத்துகிறோம். எங்களது மூதாதையர் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு நாடகம் நடத்தியதை பார்த்து பாராட்டிய மன்னர் திருமலை நாயக்கர் செப்பு பட்டயம் வழங்கியுள்ளார். இந்தாண்டு வரை தொடர்ந்து நாடகம் நடத்தி வருகிறோம்.
இந்த நாடகம் நடத்த எங்களுக்கு கோயிலில் இருந்து மாலை, மரியாதை செய்வர். 64 உப்பில்லா கட்டிகள், ஆறு மரக்கால் பழச்சாறு, ரூ.101 வழங்குவர். 12 பங்காளிகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு பங்காளி குடும்பத்தினர் சார்பில் நாடகம் நடத்தப்படுகிறது.
கோயில் மரியாதை, நாடகக்கலை அழியக்கூடாது, தமிழ் கலாசாரம், தொன்மையை பாதுகாப்பது போன்றவற்றுக்காக தொடர்ந்து நாடகம் நடத்துகிறோம். திருப்பரங்குன்றம், வலையங்குளம், சோளங்குருணி கோயில் திருவிழாவில் நாடகங்கள் நடத்துவோம் என்றார்.