24 மணி நேர தொடர் நாட்டியாஞ்சலி

மதுரை; மதுரை ஸ்ரீ கலாகேந்திரா ஆர்ட்ஸ் அண்ட் கல்சுரல் அகாடமி, தமிழ் இசைச் சங்கம் சார்பில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 24 மணி நேர தொடர் நாட்டியாஞ்சலி ராஜா முத்தையா மன்றத்தில் துவங்கியது. நேற்று (பிப். 26) மாலை 4:00 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சி, இன்று மாலை 4:00 மணி வரை இடைவிடாத 'நடன மாரத்தானாக' நடக்கிறது.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தர பிரதேசம், ஐக்கிய அரபு அமீரகம் பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர். பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக், மோகினியாட்டம், மணிப்பூரி போன்ற நடனங்கள் திறமையான கலைஞர்களால் நிகழ்த்தப்படுகின்றன.

கலாகேந்திரா தலைவர் மகாதேவன் கூறுகையில், ''இத்தகைய உலக சாதனை கலாகேந்திரா முன்னாள் இயக்குநர் ஷைலஜாவால் துவங்கப்பட்டது. தற்போது இயக்குநர் ஸ்ரீஹம்சினியால் நிகழ்த்தப்படுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு 9வது ஆண்டாக நடக்கிறது. இந்திய அளவில் 24 மணிநேர தொடர் நாட்டியாஞ்சலி இதுவே முதல்முறை.

இச்சாதனை ஸ்பாட்லைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஹைரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெறுகிறது. இவ்விரு நிறுவனங்கள் சார்பில் பங்கேற்போருக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படுகிறது'' என்றார்.

Advertisement