குப்பை தரம் பிரிக்கும் மையமான கழிப்பறை

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் பின்புறமுள்ள கழிப்பறை குப்பையை தரம் பிரிக்கும் மையமாக மாறிவிட்டது.

திருப்பரங்குன்றம் நகராட்சியாக இருந்தபோது 2006--07ல் கலெக்டர் நிதி மூலம் அங்கு கழிப்பறை கட்டப்பட்டது. அப்பகுதி ரேஷன் கடைக்கு வரும் பொது மக்கள், கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அதனை பயன்படுத்தினர்.

பின்பு பத்து ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியே கிடந்தது. தற்போது அக்கழிப்பறை குப்பையை பிரிக்கும் இடமாக மாறிவிட்டது.

பா.ஜ.,நிர்வாகி வேல்முருகன் கூறுகையில், 'அக்கழிப்பறை குப்பையை தரம் பிரிக்கும் கூடாரமாக மாறிவிட்டது. அப்பகுதியினர், மாயாண்டி சுவாமி கோயிலுக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர். கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சியில் மனு கொடுத்துள்ளோம்'' என்றார்.

மண்டல தலைவர் சுவிதா: தண்ணீர் வசதி இன்றி பல ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள், பக்தர்கள் வசதிக்காக மண்டல அலுவலகம் முன்பு இருந்த கழிப்பறை கட்டடத்தை அகற்றி, கழிப்பறை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

Advertisement