பாப்பாபட்டி கோயிலுக்கு புறப்பட்டது மாசிப்பெட்டி மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு

உசிலம்பட்டி; உசிலம்பட்டி பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசிப்பச்சை மகா சிவராத்திரி திருவிழா வழிபாட்டுக்கு மாசிப்பெட்டிகளை பூஜாரிகள், கோடாங்கிகள், பக்தர்கள் புடைசூழ எடுத்துச் சென்றனர்.
உசிலம்பட்டி பகுதியில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி திருவிழா குலதெய்வ வழிபாடாக விமரிசையாக கொண்டாடுகின்றனர். கருமாத்துார் மூணுசாமி கோயில்கள், வாலாந்துார் அங்காள ஈஸ்வரி, திடியன் சோனை முத்தையா, ஆரியபட்டி கல்யாணகருப்பசாமி, நாட்டாமங்கலம், கொக்குளம் ஆதிசிவன் உள்ளிட்ட கோயில்களுக்கு குலதெய்வ வழிபாட்டுக்காக மக்கள் திரண்டு வருகின்றனர்.
இதில் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் வழிபாட்டுக்கும் ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். நேற்று காலை 10:30 மணிக்கு, உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகாசிவராத்திரி வழிபாட்டுக்காக அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய மாசி பெட்டிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அன்னம்பாரிபட்டி, வடகாட்டுப்பட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, வழியாக இளம்தோப்பு சென்று, அம்மனின் ஆபரணங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டிய பின், பாப்பாபட்டி கோயிலுக்குச் சென்று ஆதி வழக்கப்படி பக்தர்கள் பச்சை கொண்டு வந்து இரவு வழிபாடுகள் நடந்தது. இன்று திருவிழா முடிந்த பின் நாளை பிப். 28 மாலை மீண்டும் பெட்டிகள் உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு கொண்டு வரும்போது, வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து அய்யன், மாயாண்டி சுவாமிகள் ஆணிச்செருப்பில் நடந்து கோயிலுக்கு வருவர். இதனை தரிசிக்க பக்தர்கள் திரள்வர். உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.