வீராணம் ஏரியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு! ரூ.66 கோடியில் மேம்படுத்தும் பணி துவக்கம்

சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் அருகிலுள்ளது வீராணம் ஏரி. இதன் மூலம் காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி வட்டாரங்களைச் சேர்ந்த 48 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காகவும் வீராணத்திலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 21ம் தேதி, கடலுார் வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், வீராணம் ஏரி 66.5 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என, அறிவித்தார்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 2016ல், 40 கோடி ரூபாய் செலவில் வீராணம் ஏரி துார்வாரப்பட்டு கரை அமைக்கும் பணிகள் 2019ல் முடிவுற்றது. தற்போது வெள்ள காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை போக்கும் வகையில், வீராணம் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்கள் மேம்படுத்துவது. ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்ற ஐந்து இடங்களில் புதிய மதகுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக 66.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ள காலங்களில் வீராணம் ஏரிக்கு செங்கால் ஓடை, பாப்பாக்குடி ஓடை, ஆண்டிப்பாளையம் வாய்க்காலில் தண்ணீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக இருக்கும். ஆனால், அதிகபட்சமாக 23 ஆயிரம் கன அடி நீரைத்தான் வெளியேற்ற முடிகிறது.
ஏரிக்குள் தண்ணீர் அதிகரிப்பதால் அச்சம் ஏற்படுவதுடன், வெள்ள பாதிப்பும் அதிகரிக்கிறது.
அதை போக்கும் வகையில், தண்ணீர் வெளியேற்றப்படும் வெள்ளியங்கால் ஓடை, மனவாய்க்கால், பாழவாய்க்கால் ஆகிய மூன்று பெரிய வாய்க்கால்கள் துார்வாரி ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் உள்ள பழுதடைந்த பாசன வாய்க்கால் மதகுகள் புனரமைக்கும் பணிகளும் நடக்க உள்ளது.
முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை சென்னை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜானகி, வீராணம் ஏரியை ஆய்வு செய்தார். மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும், நீரேற்றும் நிலையத்தை பார்வையிட்டார். சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன், கண்காணிப்பு பொறியாளர் மரியசூசை மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வீராணம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும்
-
குழந்தைகளிடம் வன்முறையை விதைக்கும் ஆயுதங்களின் வடிவிலான எழுது பொருட்கள்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா