ஓய்வூதியதாரர்களின் நிலையான மருத்துவ படியை வழங்க கோரிக்கை

புதுச்சேரி; அரசு ஓய்வூதியதாரர்களின் நிலையான மருத்துவப்படியை, அரசு தொடர்ந்து வழங்க வேண்டுமென, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவரது அறிக்கை:மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கான, மருத்துவ காப்பீடு திட்டத்தில், புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் சேர வேண்டும் எனவும், பிப்ரவரி மாதத்தில் இருந்து அவர்களுக்கான நிலையான மருத்துவபடி நிறுத்தப்படும் எனவும், அரசு தரப்பில் கூறியிருப்பதை ஏற்க முடியாது.

இது குறித்து, அரசு ஓய்வூதியர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேராமல் இருக்கும் ஊழியர்களுக்கு, நிலையான மருத்துவ படியினை தொடர்ந்து வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே, இத்திட்டம், புதுச்சேரி பிராந்திய ஓய்வூதியர்களுக்கு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

எனவே, புதுச்சேரி அரசு, இத்திட்டத்தில், அனைவரும் சேர வேண்டும் என கட்டாயப்படுத்தாமல், விரும்பாத ஓய்வூதியர்களுக்கு, தொடர்ந்து நிலையான மருத்துவ படியினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement