அண்ணா திடலில் கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணை: முதல்வர் வழங்கல்

புதுச்சேரி; புதுச்சேரி அண்ணா திடலில் கடை வைத்திருந்த பழைய கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையினை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் நேற்று வழங்கினார்.

புதுச்சேரி பொலிவுறு நகர மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், புதுச்சேரி அண்ணா திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைகளை சுமார் ரூ.12.5 கோடி மதிப்பில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதன் முதற்கட்டமாக, லப்போர்த் வீதியில் உள்ள 20 கடைகளும், சின்ன சுப்பராயப் பிள்ளை வீதியில் உள்ள 79 கடைகளும் கட்டி முடிக்கப்பட்டு ஏற்கனவே அங்கு கடையை நடத்தி வந்த பழைய பயனாளிகளுக்கே ஒதுக்கீடு செய்ய முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 99 கடைகளுக்கான கடை ஒதுக்கீட்டு ஆணையினை முதல்வர் ரங்கசாமி பயனாளிகளுக்கு சட்டசபை முதல்வர் அலுவலகத்தில் நேற்று வழங்கினார்.

சபாநாயகர் செல்வம், நேரு எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், வருவாய் அதிகாரிகள் சத்தியநாராயணன், பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின் அலுவலகம் வெளியில் காத்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு முதல்வர் நேரில் சென்று கடை ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார்.

Advertisement