ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்த 15 போலீசாருக்கு தலா ரூ.1,000 அபராதம்

புதுச்சேரி; புதுச்சேரி போலீஸ் தலைமையகத்திற்கு, ஹெல்மெட் அணியாமல் வந்த 15 போலீசாருக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. புதுச்சேரியில், கடந்த மாதம் 12ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என அறிவித்து, பின்பற்றப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து அலுவலகம் வர வேண்டும் என, பணியாளர் துறை, அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. போலீசார், பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என கூறி, அனைத்து போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும் என, காவல் துறையும் அறிவுறுத்தியது.

இதனிடையே, புதுச்சேரியில் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, ஜன., 12ம் தேதிக்கு பிறகு, நகரில் கெடுபிடியை குறைத்து, நீண்ட துாரம் செல்லும் இ.சி.ஆர்., கடலுார், விழுப்புரம் நெடுஞ்சாலைகளில் மட்டும், ஹெல்மெட் அணிந்து வாரத வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் புதுச்சேரி கடற்கரை சாலையில் வாக்கிங் சென்றார். அப்போது, போலீஸ் தலைமையகம் எதிரில், பைக்கில் வந்த பல போலீஸ்காரர்கள், ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்தனர்.

இதனை பார்த்த அவர், போக்குவரத்து போலீசாரை அழைத்து, ஹெல்மெட் அணியாமல் தலைமையகம் வரும் போலீசாருக்கு, அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலை மட்டும் ஹெல்மெட் அணியாமல் போலீஸ் தலைமையகத்திற்கு வந்த 15 போலீசாருக்கு , போக்குவரத்து போலீசார் தலா ரூ.1,000 அபராதமாக, ஸ்பாட் பைன் விதித்தனர்.

Advertisement