சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளுக்கு இனி அபராதம்! புதுச்சேரி கலெக்டர் அதிரடி அறிவிப்பு

புதுச்சேரி; சாலைகளில் புற்றீசல்போல் பெருகும் கடைகளை ஒழுங்குப்படுத்தும் வகையில், அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் குலோத்துங்கன் அதிரடியாக அறிவித்தார்.
புதுச்சேரிக்கு அழகே அதன் நேரான நுால்பிடித்த மாதிரி இருக்கும் வீதிகள் தான். ஆனால் இன்றைக்கு நகர வீதிகள் அனைத்தும் பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி அல்லோலப்படுகின்றது.
சாலையில் புற்றீசல் போல் கடைகள் முளைத்து வருகின்றன. இதனால் அகலமான சாலைகள் அனைத்தும், சந்துகள்போல் குறுகிபோய் உள்ளது. பெரும்பாலான நகர சாலைகளில் நடைபாதையே காணவில்லை. அந்த நடைபாதைகளில் கடைகள் தான் பரப்பப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நகர சாலைகள் அனைத்திலும் உச்சக்கட்டமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிக்கி திணறி வருகின்றன. இந்த பிரச்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மத்திய அரசு திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டத்திலும் பூதாகரமாக எதிரொலித்தது. எம்.எல்.ஏக்கள் சராமரியாக அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினர்.
சம்பத் எம்.எல்.ஏ.,: கலெக்டர் உத்தரவின்படி சாலைகளில் உள்ள கடைகளை அதிகாரிகள் அகற்றுகின்றனர். ஆனால் கொஞ்சம் நாட்களில் மீண்டும் அதே கடைகளில் முளைத்துவிடுகின்றனர். இது எனது தொகுதியில் பெரிய பிரச்னையாக உள்ளது. கேட்டால் நகராட்சிக்கு அடிக்காசு கொடுத்து தான் கடைகள் வைப்பதாக கூறுகின்றனர்.
நேரு எம்.எல்.ஏ.,: நகர பகுதியில் எந்த சாலைகளை எடுத்துக்கொண்டாலும் அது கடைகளில் ஆக்கிரமிப்பு பிடியில் தான் சிக்கியுள்ளது. நடைபாதைகளை சுத்தமாக காணவில்லை. கடைகளின் பொருட்களையும் சாலையில் பரப்பிவிடுகின்றனர். பாதசாரிகள் எப்படி தான் நடந்து செல்லுவது.
சக்திவேல், உள்ளாட்சி துறை இயக்குநர்: தெருவோரத்தில் இருக்கும் அனைத்து கடைகளையும் முறைப்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு சான்றிதழ்கள் தரப்படுகின்றது. தெருவோர வியாபாரிகளில் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் மூலவும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சாலை ஆக்கிரமிப்புகள் இல்லாமல் முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
சிவசங்கர் எம்.எல்.ஏ.,: இந்திரா சிக்னல் முதல் அரும்பார்த்தபுரம் வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தெருவோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி சாலைகளை வியாபாரிகள் ஆக்கிரமிக்க கூடாது. அப்படி தான் சட்ட பிரிவுகள் கூறுகின்றன. தெருவோர வியாபாரிகளுக்குக்கென ஏதேனும் ஒரு இடத்தினை அடையாளம் கண்டு அங்கு அவர்களுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும் என்று விதிமுறைகள் சொல்லுகின்றது. அப்படி இருக்கும்போது சாலைகளிலேயே தெருவோர கடைகளை நடத்துகின்றனர். இது எப்படி அனுமதி தரப்பட்டது.
சம்பத் எம்.எல்.ஏ.,: சாலை ஆக்கிரமிப்பு செய்யும் கடைகளை கேட்டால், உள்ளாட்சி, மின் துறை என பல துறைகளின் அனுமதி உள்ளதாக சொல்லுகின்றனர். உள்ளாட்சித் துறை ஏதேனும் சிறப்பு அனுமதி கொடுத்துள்ளதா.
சக்திவேல், இயக்குநர், உள்ளாட்சித் துறை: தெருவோர கடைகளை கண்டறிந்து ஒரு இடத்தில் ஒருங்கிணைத்து நடத்த வேண்டும். அதன்படி தான் கடற்கரை சாலையில் இருந்த கடைகள் ஒரே இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. நிரந்தரமாக சாலைகளில் கடைகளை வைக்க அனுமதி இல்லை. வியாபாரம் செய்துவிட்டு சென்றுவிட வேண்டும்
கலெக்டர் குலோத்துங்கன்: சாலைகளை ஆக்கிரமிக்கும் கடைகளை கண்டறிந்து நோட்டீஸ் விநியோகம் செய்யப்படும். அந்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்படும். ஏற்கனவே இதற்கான வேலைகளை உழவர்கரை நகராட்சி துவங்கிவிட்டது. புதுச்சேரி நகராட்சி பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்
கலெக்டரின் அதிரடி உத்தரவினை எம்.எல்.ஏக்கள் வரவேற்றனர். இந்த நடைமுறை உடனடியாக செயல்படுத்துங்கள் என்றும் வலியுறுத்தினர்.
மேலும்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா
-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி; கோயம்புத்துார் கும்பலில் 2 பேர் கைது