மூங்கிலில் இருந்து எத்தனால் ஆலை ; ஆயில் இந்தியா தலைவர் தகவல்

குவஹாத்தி; உலகிலேயே முதல் முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் உற்பத்தி செய்யும் ஆலை அசாமில் அமைக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்றும், 'ஆயில் இந்தியா' நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் ராத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக அசாமில் நடைபெற்று வந்த 'அட்வான்டேஜ் அசாம் 2.0' முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் விதமாக, ஆயில் இந்தியா நிறுவனம் புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலை, அசாமின் நுமாலிகரில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையை, ஆயில் இந்தியாவின் கீழ் இயங்கும் 'நுமாலிகர் ரிபைனரி' நிறுவனம் அமைத்து வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும். நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் அதிகளவு கிடைப்பது, இதற்கு பெரும் உதவியாக உள்ளது.

இது மட்டுமல்லாமல், ஆயில் இந்தியா நிறுவனம் பயோ காஸ் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் பிரிவிலும் அதிக வாய்ப்புகள் உள்ளதால், அதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எத்தனால் கலப்பை அதிகரிக்க முயற்சி






பெட்ரோலில் எத்தனால் கலப்பு இலக்கை 20 சதவீதத்துக்கு மேலாக உயர்த்த திட்டமிடப்பட்டு வருவதாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நிடி ஆயோக் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். வரும் 2026ம் ஆண்டுக்குள், 20 சதவீத எத்தனால் கலப்பை அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 19.60 சதவீத கலப்பை அடைந்துவிட்டதாகவும், அடுத்த மாதத்துக்குள் 20 சதவீத இலக்கு எட்டப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா பல்வேறு வகையான எரிபொருள் இறக்குமதியில் 13 லட்சம் கோடி ரூபாய் செலவழித்து வருவதாகவும், இதை குறைக்க ஏற்கனவே எடுத்து வரும் முயற்சிகள் போக, பசுமை ஹைட்ரஜன் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.


Advertisement