கிரிப்டோ கரன்சியில் முதலீடு 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி; கோயம்புத்துார் கும்பலில் 2 பேர் கைது

புதுச்சேரி; கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மேலும் 11 பேரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன், 70; கடந்த 2023ம் ஆண்டில் தொடர்பு கொண்ட மர்ம நபர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு சதவீதம் என, 300 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய அசோகன், தனது ஓய்வூதிய பலன் மற்றும் வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மர்ம நபர்கள் கூறிய ஆஷ்பே (Hashpe) இணையதள பக்கத்தில் முதலீடு செய்தார். 2 மாதங்களில் ரூ. 98 லட்சம் முதலீடு செய்ததில், லாபம் சேர்த்து ரூ. 2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி ( (டி.சி.எக்ஸ் காயின்) இருந்தது. அதனை விற்று பணமாக தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்தபோது, இணையதள பக்கம் முடக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசில அசோகன் புகார் அளித்தார். சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கோயம்புத்துாரை தலைமை இடமாக கொண்டு சினிமா நடிகை தமன்னா, காஜோல் அகர்வால் உள்ளிட்ட சில பிரபலங்கள் மூலம் கடந்த 2021ம் ஆண்டு ஆஷ்பே (ட்ரோன் கனெக்ட்) பிரமாண்ட துவக்க விழா நடத்தியுள்ளனர்.
3 மாதங்களுக்கு பிறகு மகாபலிபுரம் சொகுசு ஓட்டலில் ஆஷ்பேவில் டி.சி.எக்ஸ் (ட்ரோன் கனெக்ட்) முதலீடு செய்த 100 நபர்களுக்கு ரூ. 10 லட்சம் 1 கோடி ரூபாய் வரையிலான கார்களை முதலீடுகளுக்கு ஏற்ப பரிசாக வழங்கினர். அடுத்த சில நாட்களில் மும்பை கப்பல் ஒன்றில் மிகப்பெரிய விழா ஏற்பாடு செய்து அதில் ஆயிரக்கணக்கான மக்களை பங்கேற்க செய்து, ஆஷ்பேவில் முதலீடு செய்ய நிதி திரட்டினர்.
ஆஷ்பேவில் முதலீடு செய்யும் பணத்திற்கு கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் டி.சி.எக்ஸ் காயின் கொடுத்து, முதலீடு பணத்தை தங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளனர்.
ஆஷ்பே மூலம் பெற்ற டி.சி.எக்ஸ் காயின்களை விற்க முடியாமல், பழையபடி பணமாக மாற்ற முடியாமல் இருந்தபோது, 4வது மாதத்தில் ஆஷ்பே என்ற இணையதள பக்கம் திடீரென மாயமாகி உள்ளது. தொடர் விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த மேலும் 9 பேர் இந்த ஆஷ்பேவில் முதலீடு செய்து ரூ. 2.4 கோடி வரை இழந்தது தெரியவந்தது.
இந்த மோசடி கும்பல் மீது டில்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, கோயம்புத்துார், மும்பை, பெங்களூர், ஆந்திரா, கேரளா, விழுப்புரம், திருப்பூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பல் மீது ஏற்கனவே புதுச்சேரியில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள இம்ரான் பாஷா, ராய்ப்பூரில் கைது செய்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பணம் மோசடி செய்த கும்பலை கைது செய்ய இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையிலான குழுவினர் கோயம்புத்துாரில் பதுங்கி இருந்த மேற்கு வெங்கடசாமி சாலையை சேர்ந்த ரமேஷ்குமார் மகன் நித்தீஷ்குமார் ஜெயின் 36; அரவிந்த்குமார், 40; ஆகியோரை கைது செய்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரை பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் நாடு முழுதும் ரூ. 50 கோடிக்கு மேல் பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் கோயம்புத்துார் தாமோதரன், நுார்முகமது, சந்தானம், இம்ரான்பாஷா, நிந்தியப்பன், கணேசன், ஆலியா, ரேஷ்மா பர்வீன், அன்சர், லுக்மான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மூளையாக செயல்பட்ட பாபு (எ) சையது உஸ்மான், இம்ரான் பாஷா ஆகியோரை கைது செய்ய தனிப்படை கோயம்புத்துாரில் முகாமிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறுகையில்; போலியான ஒரு இணைய பக்கத்தை உருவாக்கி, கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் தாங்களே டி.சி.எக்ஸ் (ட்ரோன் கனெக்ட்) என்ற கரன்சியை உருவாக்கி அதில் முதலீடு செய்ய வைத்து மோசடி நடந்துள்ளது. கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் வருகிறது என்ற விளம்பரங்கள் சமூக வலைத்தளதில் அதிக அளவில் வருகிறது.
இதுபோன்ற ஆன்லைன் வர்த்தத்தில் முதலீடு செய்து கடந்த ஆண்டு மட்டும் மக்கள் ரூ. 25 கோடி இழந்துள்ளனர். உடனடி லோன், கிரிப்டோ கரன்சி விளம்பரங்கள் எல்லாம் ஆன்லைன் மோசடி கும்பலால் உருவாக்கப்பட்டது.
இதில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபடும் மக்கள் அதன் நம்பகத்தன்மை குறித்து அறிந்து கொள்ள நேரடியாக சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என கூறினார்.
மேலும்
-
மத நல்லிணக்கத்தின் அடையாளம் பீதரில் உள்ள 'ரஞ்சின் மஹால்'
-
துன்பத்தை மறந்து... இன்பத்தை ரசிக்கணுமா? நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஹொன்னாவர்!
-
ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
-
நீர் நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்
-
பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசு தான்: மத்திய அமைச்சர் தகவல்
-
மனதை இழுக்கும் ஹிடகல் பறவைகள் சரணாலயம்