தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்

2


சென்னை: தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கழுகுகள் கணக்கெடுப்பு பணிகள் இன்றும் (பிப்.,27), நாளையும் (பிப்.,28) நடைபெறுகிறது.


கழுகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கழுகுகள் கணக்கெடுப்பு பணிகள் இன்றும் , நாளையும் நடைபெறுகிறது. இந்த பணியில் வனத்துறை கள ஊழியர்கள், அரசு சாரா அமைப்புகள், மற்றும் மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுகின்றனர். 3 மாநில அரசும் இணைந்து கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்கிறது.
இதற்காக, 3 மாநிலங்களைச் சேர்ந்த கள அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டு இருப்பிடங்கள் மற்றும் வழி முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

3 மாநிலங்களிலும் மொத்தம் 106 இடங்களில் கழுகுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 33 இடங்களில் நடக்கிறது. வனத்துறை கள ஊழியர்கள், கழுகு நிபுணர்கள், அரசு சாரா அமைப்புகள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 220 பேர் கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



பாதுகாப்பு நடவடிக்கையால், வெள்ளை கழுகுகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது என புள்ளி விபரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த கணக்கெடுப்பு பணிகள் நீண்ட காலமாக கழுகுகளின் எண்ணிக்கையும், பாதுகாப்பை உறுதி செய்யவும் நடக்கிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


சிறந்த பாதுகாப்பு மற்றும் சில உயிர் கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக கழுகுகளின் எண்ணிக்கை சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளார்.

Advertisement