மதுராந்தகம் ஏரி புனரமைப்பு; ரூ. 2,172 கோடியில் பணி மும்முரம்!

6

சென்னை: செங்கல்பட்டில் உள்ள மிகப்பெரிய நீர்நிலைகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை, ரூ.2,172 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதத்திற்குள் புதுப்பிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் மதுராந்தகம் ஏரியும் ஒன்று. இது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் பழமையான ஏரியாகும். இந்த ஏரியை ரூ.2,172 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதத்திற்குள் புதுப்பிக்கப்படும் என்றும், பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த ஏரி, கடைசியாக 1798ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் லியோனல் பிளேஸால் பிரிட்டிஷ் ஆட்சியின் போது புனரமைக்கப்பட்டது. 1,058 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த நீர்நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரூ.2,172 கோடி செலவில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 86% பணிகள் நிறைவடைந்து உள்ளன.


கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இந்தப் பணியின் மூலம் ஏரியில் தேங்கும் தண்ணீரின் அளவு கணிசமாக அதிகரிக்கும். ஆற்றுப்படுகையிலிருந்து மண் எடுத்துவரப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. பழைய மதகுகளையும், அணைக்கட்டு பழைய தடுப்புச் சுவரையும் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


புதுப்பட்டு, வேடந்தாங்கல் உட்பட சுமார் 40 கிராமங்கள் இந்த திட்டத்தால் பயனடையும் என்றும், விவசாயிகள் வருடத்திற்கு மூன்று முறை நீர்ப்பாசனம் செய்ய முடியும் என்றும், வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வருகை தரும் புலம்பெயர்ந்த பறவைகளுக்கு புகலிடமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement