இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: மயிலாடுதுறையில் அதிர்ச்சி

மயிலாடுதுறை: அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் பெரும் எண்ணிக்கையில் இறந்து மயிலாடுதுறை மாவட்ட கடற்கரைகளில் ஒதுங்குவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆழ்கடலில் வசிக்கும் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடலியல் சூழலை பாதுகாக்கும் தன்மையுடையது. இவை இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரை தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டு கடலுக்கு திரும்புவது வழக்கம்.


அந்த முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து 6 இடங்களில் வைத்து ஆமைக்குஞ்சுகள் வெளிவந்த பிறகு பாதுகாப்பாக கடலில் விட்டு வருகின்றனர். தற்போது முட்டையிடும் பருவம் என்பதால் பல ஆயிரக்கணக்கான ஆலிவ் ரெட்லி ஆமைகள் மயிலாடுதுறை கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிட்டு செல்கின்றன.


இந்நிலையில் கரைக்கு வந்து திரும்பும் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் தொழிற்சாலை கழிவு நீரால் பாதிக்கப்பட்டும், மீன்பிடி வலைகள் மற்றும் கப்பல், படகுகளின் இன்ஜின் காற்றாடிகளில் சிக்கி அடிபட்டு இறக்கின்றன. இறந்த ஆயிரக்கணக்கான ஆமைகள் திருமுல்லைவாசல், தொடுவாய் கூழையார் பழையார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் ஒதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுவரை இறந்து கரை ஒதுங்கிய 45 ஆமைகளை வனத்துறையினர் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் கடற்கரையிலேயே புதைத்துள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதிகளில் இறந்து ஒதுங்கிய ஆமைகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், அருகில் வசிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது.


எனவே இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை வனத்துறையினர் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். கடலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அரிய வகை ஆமைகள் இறப்பதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மீனவர்களும் எதிர்பார்க்கின்றனர்

Advertisement