ஆடையை களைந்த போலீஸ்காரர் ஸ்டேஷனில் ரகளை; பெண் போலீசார் ஓட்டம்!

12


வேலூர்: வழக்குப் பதிய மறுத்த பெண் போலீஸ் முன், கான்ஸ்டபிள் ஒருவர் ஆடையை களைந்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூரின் விருதம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த கான்ஸ்டபிள் அருண் கண்மணி. இவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, மினி வேன் ஓன்று தன்னை இடிக்க வந்ததாகக் கூறி, அதன் டிரைவர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

டிரைவரை மிரட்டி அழைத்துக் கொண்டு கே.வி., குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார் காவலர் அருண் கண்மணி. டிரைவர் மீது வழக்குப்பதிய வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது, பணியில் இருந்த பெண் போலீசார், இன்ஸ்பெக்டர் வரும்வரை காத்திருக்குமாறு தெரிவித்தனர்.

இதனால், கோபமடைந்த அருண் கண்மணி, திடீரென தனது போலீஸ் ஆடையை கழற்றி, நிர்வாணமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ந்து போன பெண் போலீசார், ஸ்டேஷனை விட்டு உடனடியாக வெளியே ஓட்டம் பிடித்தனர்.

பின்னர், அங்கிருந்த சக காவலர்கள், அருண் கண்மணியை சமாதானப்படுத்தி, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர் குடிபோதையில் இருப்பதை உறுதி செய்வதற்கான சோதனை நடத்த முயற்சித்தனர். அங்கும் ரகளையில் ஈடுபட்ட அருண் கண்மணி, மருத்துவமனையின் கண்ணாடிகளையும் உடைத்துள்ளார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

இதையடுத்து போலீசார், அருண் கண்மணியை கைது செய்து, அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், "குடிபோதையில் பைக்கில் சென்ற கான்ஸ்டபிள் அருண் கண்மணி, வேன் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்," எனக் கூறினர்.

Advertisement