தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது: முதல்வர் ஸ்டாலின் பதிவு

சென்னை: தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது. சில மொழிகள் ஹிந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன. ஹிந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி. தமிழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி.
தன்னிலிருந்து திராவிடக் குடும்பத்து மொழிகளைக் கிளைத்திடச் செய்த தாய்மொழி. தமிழ்மொழியை ஹிந்தி மொழியாலோ, ஹிந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டைச் சிதைக்கும் நோக்கத்துடன் பன்னெடுங்காலமாக இனப் பகைவர்கள் நடத்திய படையெடுப்பை இந்த மண் தொடர்ந்து முறியடித்து வந்திருக்கிறது.
இந்த நெடிய மரபின் தொடர்ச்சிதான் திராவிட இயக்கம். தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்ட செம்மொழி என்பதும் இந்தியாவின் பிற மொழிகள் போல வடமொழி ஆதிக்கத்தால் சிதைவுறாமல் என்றும் நிலைத்திருக்கும் மொழி என்பதும் மத்தியில் ஆட்சி செய்பவர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. ஆதிக்கத்தை உணர முடியாமல் போனவர்களின் தாய்மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கரைந்து காணாமல் போன துயர வரலாற்றை, இந்தி பரவிய நிலப்பரப்பெங்கும் காண முடியும்.
பீஹார் மாநில மக்களின் சொந்த மொழியான மைதிலி, அடுத்தடுத்த தலைமுறையினர் அறிய முடியாதபடி வழக்கொழிந்தது. இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம், ஹிந்திதான் அந்த மாநிலத்தின் தாய்மொழி எனப் பலரும் நினைப்போம். உண்மை அதுவல்ல. பிரஜ்பாஷா, புந்தேல்கண்டி, போஜ்புரி, அவ்தி, கண்ணோஜி, கர்வாலி மற்றும் குமோனி என மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது.
இவை மட்டுமா? ஹரியாண்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, சந்தாலி, சத்தீஸ்கரி, கோர்பா உள்ளிட்ட மொழிகள் பேசுவோரைத் தேட வேண்டியுள்ளது. உ.பி, பீகார், ம.பி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் என ஹிந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, பண்பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன.
தமிழகத்தில் உள்ள பல கட்சிகளும் இணைந்து இந்தித் திணிப்பை எதிர்க்கின்றன. தமிழ் மண்ணிற்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத, தமிழர்களின் பண்பாட்டிற்கு நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட பா.ஜ.,வும் அதன் கூலிப்படையினரும் மட்டும், 'ஹிந்தி-சமஸ்கிருதம் என்று எங்கே இருக்கிறது? மூன்றாவது மொழியாக, இந்தியாவில் உள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம்.
அயல்நாட்டு மொழிகளைக் கூடக் கற்கலாம்' என்று ஒரு 'தினுசாக'ப் பேசுகிறார்கள். அடடா. இவர்களுக்குத்தான் இந்திய மொழிகள் மீது எவ்வளவு அக்கறை? மும்மொழித் திட்டம் என்ற பெயரில் என்னென்ன மொழிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என அட்டவணையைப் பார்த்தால் பெரும்பாலான மாநிலங்களில் ஹிந்தி அல்லது சமஸ்கிருதமே முன்னிலைப் படுத்தப்படுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.










மேலும்
-
மதுரை - கோவைக்கு பறந்த 'இதயம்'
-
பல கோடி கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகைகள் தமன்னா, காஜலுக்கு சிக்கல்
-
சீமான் வீட்டில் மோதல்: போலீஸை தடுத்த ஊழியர்கள் கைது
-
தடையை மீறி போராட்டம்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 50 பேர் கைது!
-
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசுப் பள்ளி ஆசிரியர் கைது