மனதை இழுக்கும் ஹிடகல் பறவைகள் சரணாலயம்

கோடைக்காலம் துவங்கி விட்டது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் நெருங்குகின்றன. சுற்றுலா செல்ல பிளான் போடுகின்றனர். சுற்றுலா தலங்களை தேடுகின்றனர். இவர்களுக்கு ஹிடகல் பறவைகள் சரணாலயம் பெஸ்ட் சாய்ஸ்.

கர்நாடகாவில் புராதன பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களுக்கு பஞ்சம் இல்லை. கோவில்கள், நீர் வீழ்ச்சிகள், கோட்டைகள், அரண்மனைகள், ஆறுகள், அணைகள் என, பல இடங்கள் சுற்றுலா பயணியரை, வா வா என கை வீசி அழைக்கின்றன. இவற்றில் ஹிடகல் பறவைகள் சரணாலயமும் ஒன்றாகும்.

பெலகாவியின், ஹிடகல் அணை பகுதியில் ஏற்கனவே வண்ணத்து பூச்சி பூங்கா, சுற்றுலா பயணியரை கவர்ந்திழுக்கிறது. தற்போது பறவைகள் சரணாலயமும், மக்களை ஈர்க்க துவங்கியுள்ளது.

கர்நாடகாவில் 12 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. ஹிடகல் பறவைகள் சரணாலயம், முற்றிலும் மாறுபட்டதாகும். உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன.

பறவைகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், சரணாலயத்தை மேலும் மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பணிகளும் நடந்து வருகின்றன. ஹிடகல் அணை 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இதனை கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் போன்று மேம்படுத்த, அரசு விரும்புகிறது. பறவைகள் சரணாலயத்தில், முதலை பூங்கா அமைக்கப்படுகிறது. இசை நீர் வீழ்ச்சி அமைக்கப்படுகிறது.

குஜராத்தின், ஆமதாபாத்தில் இருக்கும் பறவைகள் சரணாலயம் போன்றே, ஹிடகல்லிலும் அமைகிறது. பறவைகள் வசிக்கவும், இன விருத்தி செய்வதிலும் எந்த பிரச்னையும் ஏற்படாமல், அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன. ஏற்கனவே 21,000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன.

ஹிடகல் அணை இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. அணை அருகில் நின்று பார்த்தால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, மனதை கொள்ளை கொள்ளும், இயற்கை காட்சிகள் தெரிகின்றன.

அணை நீரில் இருந்து வீசும், இதமான குளிர்ந்த காற்றை சுவாசித்தபடி நடந்து செல்வது, அற்புதமான அனுபவமாக இருக்கும். இந்த அனுபவத்துக்காகவே, மழைக்காலம் மட்டுமின்றி, கோடைக் காலத்திலும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவர்கள் அணையையும், பறவைகள் சரணாலயத்தையும் கண்டு, மன நிறைவோடு செல்கின்றனர்.

அணை மற்றும் பறவைகள் சரணாலயத்தில், போட்டோ ஷூட் நடத்துவோரும் அதிகம். பெரும்பாலான திரைப்பட படப்பிடிப்புகளும் நடந்துள்ளன. பெலகாவிக்கு வரும் போது, ஹிடகல்லுக்கு வர மறக்காதீர்கள்.



எப்படி செல்வது?



பெங்களூரில் இருந்து, 522 கி.மீ., தொலைவில் ஹிடகல் உள்ளது. அரசு பஸ், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகனங்களும் ஏராளம். விமானத்திலும் வரலாம். சாம்ப்ரா விமான நிலையத்தில் இறங்கி, சாலை வழியாக ஹிடகல்லுக்கு செல்லலாம்.

Advertisement