நீர் நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்

கர்நாடகாவில் மார்ச் துவங்கி மே இறுதி வரை, கோடை காலம் நிலவும். குறிப்பாக வடமாவட்டங்களில் வெயில் சதம் அடித்து விடும். தென்மாவட்டங்கள் மலை பாங்கான இடம் என்பதால், பெரிய அளவில் வெயிலின் தாக்கம் இருக்காது. ஆனால் கடந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமே கோடை காலம் துவங்கியது.
வடமாவட்டம், தென்மாவட்டம் என்று பார்க்காமல் அனைத்து பகுதிகளிலும் வெயில் வாட்டி வதைத்தது. கடந்த 2023ல் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால், நீர்நிலைகளில் இருந்த தண்ணீரும் வேகமாக காலியானது.
ஆனால் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி இருந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டே போல இந்த ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கோடை காலம் துவங்கி விட்டது. மாநிலம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
குளுமையான நகரம் என்று பெயர் பெற்ற பெங்களூரிலும் இதே நிலை தான். வெயில் சுளீர் என்று அடிக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
வெயிலில் இருந்து தப்பிக்கும் வகையில், நீர்நிலைகள் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, மக்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல ஆரம்பித்து உள்ளனர்.
குளுகுளுப்பான இடம் என்று அழைக்கப்படும் குடகு, சிக்கமகளூரு, ஷிவமொக்கா ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணியர் வருகை வார இறுதி நாட்களில் வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவிலும் சுற்றுலா பயணியர் வருகை அதிகமாக உள்ளது.
சிக்கமகளூரு, குடகில் ஏராளமான அருவிகள் உள்ளன. வெயிலால் சூடான உடலை குளுமைப்படுத்த, அருவிகளில் சுற்றுலா பயணியர் உற்சாக குளியல் போடுகின்றனர். கடலோர மாவட்டங்களில் கடலில் குளித்து குதுகலிக்கின்றனர். சுற்றுலா பயணியர் வருகையால், சுற்றுலா தலங்களிலும் நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கடைகள் வைத்திருப்பவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது. அடுத்த மாதம் இறுதியில் இருந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு, மக்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
-
தமிழ் மொழியை வியாபாரமாக பயன்படுத்தும் தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
63 நாயன்மார்களில் அமர்ந்த கோலம் கொண்ட நாயன்மார் இவர் மட்டுமே..
-
மதுரை - கோவைக்கு பறந்த 'இதயம்'
-
பல கோடி கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகைகள் தமன்னா, காஜலுக்கு சிக்கல்
-
சீமான் வீட்டில் மோதல்: போலீஸை தடுத்த ஊழியர்கள் கைது