துன்பத்தை மறந்து... இன்பத்தை ரசிக்கணுமா? நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஹொன்னாவர்!

அலுவலக வேலையால், அலுப்பு அடைந்த பலரின் வாழ்வில் புத்துணர்ச்சியும், உற்சாகமும் கொடுக்கும் இடம் தான் ஹொன்னாவர்.

உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ளது ஹொன்னாவர். பெயரைப் போலவே இடமும் வித்தியாசமாகவே இருக்கிறது. ஹொன்னாவர் அரபிக்கடல், மேற்கு தொடர்ச்சி மலை இவை இரண்டிற்கும் நடுவில் அழகுற அமைந்து உள்ளது.

இங்கு மரம், கடல், அருவி என இல்லாத விஷயங்களே இல்லை. பொதுவாக, அருவிக்காக ஒரு சுற்றுலா, கடற்கரைக்காக ஒரு சுற்றுலா என பலரும் செல்வர். ஆனால், இவை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடமாக ஹொன்னாவர் உள்ளது.

உங்கள் கண்களுக்கு விருந்து அளிக்கக் கூடிய வகையிலே இங்கு உள்ள ஒவ்வொரு இடமும் உள்ளன. பாலங்கள், நீர் வீழ்ச்சிகள், கடலோர உணவுகள், மலையேற்ற பாதைகள், சதுப்புநிலக் காடுகள் என அனைத்தும் இருக்கிறது. இதனாலேயே வார விடுமுறை தினங்களில் வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.

இங்கு ஒரு மிக நீளமான அற்புதமான ரயில்வே பாலம் உள்ளது. இது 1994ம் ஆண்டு, கட்டப்பட்டது. இதை பார்ப்பதற்கே ஆசையாக உள்ளது. அப்போ, அதில் பயணம் செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்த ரயில்வே பாலம், நம்ம ஊரு பாம்பன் பாலம் போல இருக்கிறது.

இந்தியாவில் உள்ள 12 நீலக் கொடி கடற்கரைகளில் ஹொன்னாவரில் உள்ள காசர்கோடு கடற்கரையும் இடம் பெற்று உள்ளது. நீலக் கொடி கடற்கரை என்பது தூய்மையான கடற்கரைகளுக்கு கொடுக்கப்படும் ஒரு சான்றிதழாக கருதப்படுகிறது.
Latest Tamil News
ஹொன்னாவரில் இருந்து 7 கி.மீ.,யில், அப்சரகொண்டா எனும் கிராமம் உள்ளது. இங்கு சூரியன் மறையும் காட்சியை பார்க்க அற்புதமாக இருக்கும். அப்சரகொண்டா கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் மஹா கனபதி ஆலயம் மற்றும் உக்ர நரசிம்ம ஆலயம், ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி ஆலயம் உள்ளன.

கடந்த 16ம் நுாற்றாண்டை சேரந்த பசவராஜ் துர்கா கோட்டை மற்றும் ஆலயம், கடற்கரைக்கு நடுவில் உள்ள ஒரு தீவில் உள்ளது. இக்கோவிலை படகு மூலம் எளிதில் அடையலாம். இது அரபிக்கடல் மற்றும் ஷராவதி நதியால் சூழப்பட்டு உள்ளது.

இந்த பகுதியில் கோடைக் காலத்தில் அதிக வெப்பமும்; மழைக்காலத்தில் பலத்த மழையும் பெய்கிறது. ஹொன்னாவரை பார்வையிடுவதற்கு அக்டோபர் முதல் பிப்ரவரி வரையான மாதங்கள் சிறந்தது.


எப்படி செல்வது?



ரயில்: பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் இருந்து ஹொன்னாவர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் செல்லலாம். பின், அங்கிருந்து பஸ் மூலம் சுற்றுலா தளத்தை அடையலாம்.

பஸ்: பெங்களூரில் இருந்து ஏராளமான டிராவல்ஸ் பஸ்கள் செல்கின்றன. இதன் மூலம் நீங்கள் ஹொன்னாவரை எளிதில் அடைய முடியும்.

Advertisement