சீமான் வீட்டில் மோதல்: போலீஸை தடுத்த ஊழியர்கள் கைது

21

சென்னை: சீமான் வீட்டில் சம்மன் கொடுக்கச்சென்றபோது, தடுக்க முயற்சித்த போலீசாருக்கும், அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், திருமண மோசடி செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, சீமான் மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இவ்வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என, சீமானுக்கு 'சம்மன்' அனுப்பி இருந்தனர். ஆனால் சீமான் நேரில் ஆஜர் ஆகவில்லை. சீமான் தரப்பில் வக்கீல் ஆஜர் ஆக கால அவகாசம் கோரினார்.


Tamil News

இந்நிலையில், நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில், நாளை (பிப்.,28) காலை 11 மணிக்கு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுக்க போலீசார் சென்றனர்.


அப்போது வீட்டினுள் நுழைய முயற்சித்த போலீசாரை, சீமான் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தடுக்க முயற்சித்தனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் ஒட்டிய சம்மனை சீமான் வீட்டு ஊழியர்கள் கிழித்தனர். இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சீமான் மனைவி கயல்விழி, போலீசாரிடம் பேசினார்.

வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், சீமான் வீட்டு ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.


புகார் தொடர்பாக, தனிப்படை போலீசார், கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்று, விஜயலட்சுமியிடம் நேற்று விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சீமான் விளக்கம்



முன்னதாக பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராக மறுப்பது குறித்து, நிருபர்கள் கேள்விக்கு சீமான் கூறியதாவது: அது சொல்லுவாங்க. ஏற்கனவே, ஒரு முறை சந்தித்து எல்லாம் சொல்லியாச்சு, அவங்களுக்கு இந்த விளையாட்டை நிறுத்த விருப்பம் இல்லை.

அவங்க நிறுத்தாமல் இழுத்து கொண்டே இருப்பார்கள். மறுபடியும் நேரம் கிடைக்கும் போது சொல்கிறேன் என்று சொல்லி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.








வழக்குப்பதிவு

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். காவலாளி துப்பாக்கி காட்டி மிரட்டியதாக போலீசார் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசாரை தாக்கியதாகவும், துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Advertisement