அமெரிக்காவில் கார் மோதியதில் கோமா நிலையில் இந்திய மாணவி: தந்தை இந்தியாவில் பரிதவிப்பு

5


வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்து வரும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவர், கார் மோதியதில் பலத்த காயமடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தந்தை, அமெரிக்கா செல்ல விசாவிற்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.


மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனாஜி ஷிண்டே. இவரது மகள் நீலம்(35). இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பல்கலையில் அறிவியல் பாடத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இவரது தாயார் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த 14ம் தேதி மாலை அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கை, கால், மார்பு மற்றும் இதயம் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர் கோமா நிலைக்கு சென்ற அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். அவரது மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

நீலம், கடந்த 14ம் தேதி காயமடைந்தாலும் உடன் படிக்கும் மாணவிகள் 16ம் தேதி தான் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் உடனடியாக அமெரிக்கா செல்வதற்கு விசாவிற்கு விண்ணப்பித்து உள்ளார். இதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லலை. இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத்பவாரின் மகளான எம்.பி. சுப்ரியா சுலே கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதனிடையே, நாளை காலை விசா வழங்குவதற்கான நேர்காணல் தனாஜி ஷிண்டேவுக்கு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement