நாளை ஆஜராக மாட்டேன்: சீமான் உறுதி

15


கிருஷ்ணகிரி: '' போலீசார் அளித்த சம்மனுக்கு நாளை ஆஜராக முடியாது. தர்மபுரி செல்ல உள்ளேன்,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


நடிகர் விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், திருமண மோசடி செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, சீமான் மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவரது வீட்டில் சம்மன் ஒட்டச் சென்ற போது, போலீசாருக்கும், வீட்டு ஊழியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


அசிங்கப்படுத்த முயற்சி




இது தொடர்பாக சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த விவகாரத்தை திரும்ப திரும்ப பேசி என்னை அசிங்கப்படுத்திவிட வேண்டும் என இதனைச் செய்கிறார்கள். இதில் ஆட்சியும், ஆட்சியாளர்களும் தான் அசிங்கப்படுகிறார்களே தவிர, எனக்கு ஒன்றும் இல்லை. இதில் காட்டும் தீவிரத்தை சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் காட்டவில்லை.

ஏற்கனவே அளித்த சம்மனுக்கு கையெழுத்து போட்ட பிறகு, திட்டமிட்ட நிகழ்ச்சி உள்ளதால் வர முடியாது. பிறகு வருகிறேன் எனகூறி உள்ளேன். வேறு நாட்டிற்கு சென்று நான் தலைமறைவாகிவிட முடியாது. எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளது. தினமும் உங்களை சந்திக்கிறேன். இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதே போன்று, வேறு எதிலாவது இந்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளதா என பாருங்கள். எவ்வளவு கேவலமான ஆட்சி அதிகாரத்தை நடத்திக் கொண்டு உள்ளனர்.வேறு எந்த பிரச்னையிலாவது இதே போன்று செய்து உள்ளார்களா?


கோழையா




கிருஷ்ணகிரியில் தற்போது உள்ளேன். இங்குள்ள போலீசுக்கும், அங்குள்ள போலீசுக்கும் தெரியும். பிறகு என் வீட்டில் போய் ஒட்டுவது ஏன்?
சம்மன் ஒட்டிய பிறகு, கதவில் உள்ளதை வீட்டில் உள்ளவர்கள் அங்கிருந்தவரை வைத்து கிழித்து உள்ளனர். அதில் என்ன பிரச்னை உள்ளது. வருவேன் என சொன்னால் வருவேன். ஏற்கனவே உங்கள் முன்பு ஆஜராகி பதில் சொல்லி உள்ளேன். பிறகு வராமல் போவதற்கு உங்களை போன்று நான் என்ன கோழையா?
வருவேன் என சொல்லிய பிறகு மீண்டும் இந்த வேலையைச் செய்வது ஏன்? இதனால், நான் அசிங்கப்படுவேன் என நினைக்கிறீர்களா?. இல்லை நீங்கள் அசிங்கப்படுகிறீர்களா?


நேரில் விசாரணை




பார்ப்பவர்கள் முடிவு செய்யட்டும். எங்கே போகப்போகிறேன். இங்கே தான் இருக்கிறேன். நாளை இல்லை என்றால் நாளை மறுநாள் வருவேன். நாளைக்கே வந்தாக வேண்டும் என்றால்… நாளை வர முடியாது. என்ன செய்வீர்கள். திருப்பி சம்மன் ஒட்டுவீர்கள். அதனைப் பற்றி பேசுவீர்கள். சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து வந்து அவரிடமும் என்னிடமும் நேரில் விசாரிக்க வேண்டும்.


தி.மு.க., ஆட்சியில்





15 ஆண்டுகளாக எத்தனை நாடகம். மக்களுக்கு அரசு சொல்ல விரும்புவது என்ன என்ன செய்ய நினைக்கிறது. விசாரிக்காமல் நீங்களே முடிவு செய்து விட்டீர்கள். என்னை என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள். என்னை ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு அஞ்சுகிறவனோ, பயந்து ஓடுபவனோ கிடையாது. நான் வருவேன். நாளை 11 மணிக்கு வந்தாக வேண்டும் என்றால், வர முடியாது. முடிந்ததை செய்யுங்கள்.

இந்த வழக்கை நான் தான் போட்டேன். தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது எல்லாம் இந்த குற்றச்சாட்டு வரும். அ.தி.மு.க., ஆட்சியில் இருக்கும்போது இந்த பிரச்னை வரவில்லை. தி.மு.க., வரும்போதும், தேர்தல் வரும் போதும் வரும் என்னை சமாளிக்க முடியாமல் அந்த பெண்ணை கொண்டு வந்து நிறுத்துவார்கள்.


நாடகம்




ஈ.வெ.ரா., விவகாரத்தில் வாங்கிய அடியில் என்ன செய்வது என தெரியாமல் என்னை எப்படி சமாளிப்பது என தெரியாமல் அந்தப் பெண்ணை கொண்டு வந்து நிறுத்துவார்கள். நான் போட்ட இந்த வழக்கை விசாரிக்காமல், நினைக்கும் போது எந்த பெண்ணை கூட்டி வந்து என்னை சமாளிக்க இந்த நாடகத்தை அரங்கேற்றுவார்கள். நானும் இந்த நாடகத்தை பார்க்கப் போகிறேன். என்ன நடக்கப் போகிறது என் அனைவரும் பாருங்கள். நாளை தர்மபுரி செல்கிறேன். வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசன் அங்கு தான் உள்ளது. உடனே வர முடியாது. என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement