பீஹாரால் இந்தியா வளரவில்லை: சர்ச்சைக்குள்ளான பதிவால் கேந்திர வித்யாலயா பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்

11


பாட்னா: '' பீஹார் மாநிலம் இந்தியாவில் உள்ளதால் நாடு வளரவில்லை, '' என கேந்திர வித்யாலயா பள்ளி ஆசிரியை வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


பீஹாரின் ஜெகனாபாத் நகரில் கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 24 வயதான பெண் ஒருவர் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார்.


இதன் பின்னர் அவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியதாவது: எனது முதல் பணியிடத்தை எப்போதும் நான் மறக்க மாட்டேன். கேந்திர வித்யாலயாவுக்கு பல பிராந்தியங்கள் உள்ளது. கோல்கட்டா பகுதிக்கு செல்ல பொதுவாக மக்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால், நான் அதற்கு தயாராகத் தான் இருந்தேன். யாரும் செல்ல விரும்பாத கோல்கட்டா, ஹிமாச்சல பிரதேசம், ஒடிசா, லடாக் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பணியாற்ற தயாராகத் தான் இருந்தேன். ஆனால், பீஹார் செல்ல தயாராக இல்லை.


பீஹார் மக்களுக்கு நாட்டை பற்றிய உணர்வு கிடையாது. பீஹார், இந்தியாவில் இருப்பதால் தான் நமது நாடு வளரும் நாடாக இருக்கிறது. நாட்டை விட்டு பீஹார் எப்போது பிரிகிறதோ, அன்று இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இவ்வாறு அந்த வீடியோவில் கூறியிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அந்த பெண் ஆசிரியரை கடுமையாக விமர்சிக்க துவங்கினர். உடனடியாக அந்த பெண் ஆசிரியர், தனது பக்கத்தில் இருந்து வீடியோவை நீக்கினார். இருப்பினும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து, அவரை வசைபாடி வந்தனர்.


இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேந்திரிய வித்யாலயா உயர் அதிகாரிகளுக்கு லோக் ஜனசக்தி கட்சி எம்.பி., ஷம்பவி சவுத்ரி கடிதம் எழுதினார். இதனையடுத்து அந்த பெண் ஆசிரியர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வீடியோவும் போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளதால், அவர்கள் விசாரிக்கதுவங்கி உள்ளனர்.

Advertisement