அறியாமையால் புகார் கூறும் சாம் பிட்ரோடா: கல்வி அமைச்சகம் கண்டனம்!

4


புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப்பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா கூறிய குற்றச்சாட்டுகளை மத்திய கல்வி அமைச்சகம் நிராகரித்து கண்டனம் தெரிவித்துள்ளது.


காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா. சோனியா, ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர். தான் பேசும் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, அமெரிக்காவை போல் இந்தியாவிலும் பரம்பரை வரி விதிக்க வேண்டும் என கூறினார்.


அவருடைய கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. அடுத்து, இந்தியர்களின் நிறம், இனங்களை ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையில் சிக்கினார். நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன்பும் அவரது பேச்சுகள் விவாதங்களுக்கு உள்ளானது.


இப்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் சாம் பிட்ரோடா.
ராஞ்சி ஐ.ஐ.டி. மாணவர்களுடன் கடந்த 22ம் தேதி ஆன்லைன் கருத்தரங்கில் பேசியபோது, ஆபாச படங்களை புகுத்தி சிலர் தொந்தரவு செய்ததாகவும், ஜனநாயகத்தில் இது ஏற்புடையதா என சாம் பிட்ரோடா கேள்வி எழுப்பி இருந்தார்.

அவருடயை கருத்தை மத்திய கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது.
சாம் பிட்ரோடா சொல்வதுபோல் அப்படி ஒரு ஐ.ஐ.டியே ராஞ்சி நகரில் இல்லை. அங்கு ஐ.ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம்தான் இருக்கிறது.


அவர்களும் சாம் பிட்ரோடாவை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். சாம் பிட்ரோடா அடிப்படையே இல்லாத கருத்துகளை கூறி, அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.


நாட்டில் சிறப்பாக செயல்படும் உயர் கல்வி நிறுவனத்தின் புகழை கெடுக்கும் வகையில் அவருடைய கருத்து பொறுப்பற்றதாக இருக்கிறது. இவ்வாறு மத்திய கல்வி அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement