உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின்

2

சென்னை: '' உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்'' , என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னை கொளத்தூரில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையை திறந்து வைத்து அவர் பேசியதாவது: இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவும் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை 41 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அதில் 2.60 லட்சம் இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர்.

உயர்கல்வியில் இடைநின்ற மாணவர்கள் தொடர்ந்து படிக்கவும், மத்திய அரசுப் பணிக்கு தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் கல்விக்காக செய்வதை விட எனக்கு வேறு மகிழ்ச்சி என்ன இருக்கப் போகிறது.


இந்த மருத்துவமனை வட சென்னை மக்களின் உயிர்காக்கும் மருத்துவமனையாக இருக்கும். வட சென்னயை வளர்க்கும் நமது நடவடிக்கையில் இம்மருத்துவமனை ஒரு மைல் கல். திராவிட மாடல் அரசை பொறுத்தவரை கல்வியும், மருத்துவமனையும் நமது இரு கண்கள். கல்விக்கு கவனம் செலுத்துவதைப் போல், மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுத்த புதிய மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. மருத்துவம் சார்ந்த ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகளுக்கு பணியாளர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள வ ரும்புவது


இங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள், சிகிச்சைக்கு வரும் மக்களை உங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்க வேண்டும். பரிவோடு சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனையை சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோன்று பொதுமக்களுக்கு சுய ஒழுக்கம் என்பது மிக முக்கியம். அதனை பின்பற்றி பொது இடங்களில் தூய்மையை பேணி பாதுகாக்க வேண்டும். கட்டமைப்பை உருவாக்குவது எவ்வளவு முக்கியமோ, அதை பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும். நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகள் சட்டம் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் திருத்தப்படும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement