ஜெர்மன் ஓபன் பாட்மின்டன்: காலிறுதியில் ரக் ஷிதா

முல்ஹெய்ம்: ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ முன்னேறினார்.

ஜெர்மனியில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ, ஹாங்காங்கின் லோ சிங் யான் மோதினர். அபாரமாக ஆடிய ரக் ஷிதா 21-17, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் தஸ்னிம் மிர், கனடாவின் ரேச்சல் சான் மோதினர். இதில் தஸ்னிம் மிர் 20-22, 21-18, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 14-21, 12-21 என சகவீரர் பிரியான்ஷு ரஜாவத்திடம் தோல்வியடைந்தார். அடுத்து நடந்த 2வது சுற்றுப் போட்டியில் பிரியான்ஷு 21-16, 18-21, 4-21 என பிரான்சின் டோமா ஜூனியர் போபோவிடம் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் 21-14, 15-21, 21-17 என கனடாவின் பிரையன் யாங்கை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
கலப்பு இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 21-10, 21-19 என ஜெர்மனியின் ஜான்சென், நுயென் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement