டில்லி அணியில் பீட்டர்சன்: ஆலோசகராக நியமனம்

புதுடில்லி: ஐ.பி.எல்., டில்லி அணிக்கு ஆலோசகராக இங்கிலாந்தின் பீட்டர்சன் நியமனம்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 18வது சீசன் வரும் மார்ச் 22ல் கோல்கட்டாவில் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள டில்லி அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி, பவுலிங் பயிற்சியாளராக முனாப் படேல் உள்ளனர். இந்நிலையில் டில்லி அணிக்கு ஆலோசகராக, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் 44, நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 200 'டி-20' போட்டியில் (5695 ரன், 17 விக்கெட்) பங்கேற்றுள்ள பீட்டர்சன், ஐ.பி.எல்., அரங்கில் பெங்களூரு (2009-10), டில்லி (2012-14), புனே (2016) அணிகளுக்காக (36 போட்டி, 1001 ரன்) விளையாடினார். இதில், 2014ல் டில்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஐ.பி.எல்., அரங்கில் முதன்முறையாக பயிற்சியாளர் குழுவில் இணைகிறார்.
இதுகுறித்து பீட்டர்சன் கூறுகையில், ''மீண்டும் டில்லி அணியில் இணைய இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அணியுடன் மறக்க முடியாத நிகழ்வுகள் நிறைய உள்ளன. டில்லி நகரம், அங்குள்ள ரசிகர்கள் மிகவும் பிடிக்கும். வரும் சீசனில் டில்லி அணி கோப்பை வெல்ல தேவையான ஆலோசனை வழங்குவேன்,'' என்றார்.

Advertisement