ரஞ்சி: கேரளா அணி எழுச்சி

நாக்பூர்: ரஞ்சி கோப்பை பைனலில் கேரளா அணியின் ஆதித்யா அரைசதம் கடந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனலில் விதர்பா, கேரளா அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 254/4 ரன் எடுத்திருந்தது. டேனிஷ் (138), யாஷ் தாக்கூர் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய டேனிஷ் மலேவார் (153) நம்பிக்கை தந்தார். யாஷ் தாக்கூர் (25), கேப்டன் அக்சய் வாட்கர் (23), நாச்சிகேத் பூதே (32) ஓரளவு கைகொடுத்தனர். விதர்பா அணி முதல் இன்னிங்சில் 379 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஹர்ஷ் துபே (12) அவுட்டாகாமல் இருந்தார். கேரளா அணி சார்பில் நிதிஷ், ஈடன் ஆப்பிள் டாம் தலா 3, நெடுமான்குழி பசில் 2 விக்கெட் சாய்த்தனர்.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய கேரளா அணிக்கு ரோகன் (0), அக்சய் சந்திரன் (14) ஏமாற்றினர். பின் இணைந்த ஆதித்யா சர்வதே, அகமது இம்ரான் ஜோடி கைகொடுத்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த போது அகமது இம்ரான் (37) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ஆதித்யா அரைசதம் கடந்தார்.
ஆட்டநேர முடிவில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்து, 248 ரன் பின்தங்கி இருந்தது. ஆதித்யா (66), கேப்டன் சச்சின் பேபி (7) அவுட்டாகாமல் இருந்தனர். விதர்பா அணி சார்பில் தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement