இஸ்ரேலில் கூட்டத்தில் கார் புகுந்து பலர் காயம்; பயங்கரவாத தாக்குதல் என போலீசார் சந்தேகம்

டெல் அவிவ் : இஸ்ரேலில் பாதசாரிகள் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பர்தேஷ் ஹன்னா - கர்குர் சந்திப்பில் உள்ள நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் பலர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த கார், கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதனால், மக்கள் அலறியடித்து ஓடினர். இச்சம்பவத்தில் 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும், அந்த இடத்தில் இரண்டு போலீசார் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. பயங்கரவாதி என சந்தேகப்படும் எந்த நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட நபருக்கு 24 வயது இருக்கலாம் எனவும் அவர் மீது எந்த வழக்கும் இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.