உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:''அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படும். வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அதற்குரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில், 210 கோடி ரூபாய் செலவில், புதிதாக புனரமைக்கப்பட்ட, அரசு மருத்துவமனையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
நம் அரசை பொறுத்தவரை, கல்வியும், மருத்துவமும் இரு கண்கள். அதனால், கல்விக்கு கவனம் செலுத்துவது மாதிரி, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அந்த வரிசையில், இந்த அரசு மருத்துவமனையை, திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சி.
இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என, அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது, உங்களை நம்பி மருத்துவம் பார்க்க வரக்கூடிய மக்களை, உங்கள் வீட்டில் உள்ள நபர்களை போல பார்த்துக் கொள்ள வேண்டும்.
பரிவோடு சிகிச்சை அளியுங்கள். அதோடு மருத்துவமனையை, சுத்தமாக, சுகாதாரமாக வைத்துஇருக்கவும். பொதுமக்களும் மருத்துவமனையை, சுய ஒழுக்கத்தோடு உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். ஒரு கட்டமைப்பை உருவாக்குவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட பாதுகாப்பாது முக்கியம்.
மாற்றுத்திறனாளிகள் சகோதர - சகோதரிகளுக்கு, அதிகாரத்தில் பங்கு அளிக்க, அவர்களின் பிரதிநிதித்துவ உரிமையை மீட்டெடுக்க, ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், நியமன முறையில், உரிய அங்கீகாரம் வழங்க, வரும் சட்டசபை கூட்டத்தொடரில், அதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகள் இடம் பெறுவது உறுதி செய்யப்படும். அவர்களின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகளில், பிரதிநிதித்துவம் வழங்குவதுதான், உண்மையான சமூக நீதி.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வேலு, சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வந்த முதல்வருடன், பொதுமக்கள், கட்சியினர், மருத்துவப் பணியாளர்கள் என பலரும், தங்கள் மொபைல் போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். சிலரின் மொபைல் போனை வாங்கி, முதல்வரே படம் எடுத்துக் கொடுத்தார்.
மேலும்
-
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை