ஆதரவற்ற மனநலம் பாதித்தோர் இல்லாத தமிழகம் கொள்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை:தமிழகத்தில், ஆதரவற்ற மனநலம் பாதித்தோர் இல்லாத நிலையை உருவாக்க, தமிழ்நாடு மாநில கொள்கையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில், 15.81 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, 25 போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் திறந்து வைத்தார்.
'ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலன் காக்கும், தமிழ்நாடு மாநில கொள்கை - 2024'ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
ஆதரவற்ற நிலையில், சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோரை, அடையாளம் கண்டு மீட்பது உள்ளிட்ட அணுகுமுறை குறித்த நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன
இச்சேவையில் ஈடுபடும், பல்வேறு துறைகளின் அலுவலர்களின் பொறுப்புகள் குறித்த வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு, அவசர சிகிச்சை, இடைநிலை மருத்துவ கவனிப்பு, நீண்டகால பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் சமூகத்துடன் மீண்டும் இணைதல் உள்ளிட்ட நான்கு நிலைகளிலான கவனிப்பு வரையறுக்கப்பட்டுஉள்ளது
சிகிச்சை முடிந்து குணமடைந்த ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கவும், குடும்பத்துடன் இணைய சாத்தியம் இல்லாதவர்களுக்கு, தேவையான ஆதரவையும், பாதுகாப்பையும் வழங்க, இக்கொள்கை வலியுறுத்துகிறது
இந்த சேவைகளை செயலாக்கத்திற்கு கொண்டு வருவதை பார்வையிட, மாநில மனநல ஆணையத்திற்கும், மாவட்ட அளவில் கண்காணிக்க, மாவட்ட மனநல குழுவிற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
இந்த கொள்கை வாயிலாக, ஒருங்கிணைந்த மனநல மருத்துவ சேவைகளை வழங்கி, ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு வசதி வாரியம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில், 776 கோடி ரூபாய் மதிப்பில், கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நேற்று திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட கோவில்களுக்கான பராமரிப்பு மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்கள், புதுக்கோட்டை தேவஸ்தானத்தில் உள்ள 225 கோவில்கள், தஞ்சாவூரில் அரண்மனை தேவஸ்தானத்தில் உள்ள 88 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக, அரசால் ஆண்டுதோறும், மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கன்னியாகுமரி கோவில்களுக்கு வழங்கப்பட்ட மானியத் தொகை, 8 கோடி ரூபாயில் இருந்து, 13 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு, 5 கோடி ரூபாயில் இருந்து, 8 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு, 3 கோடி ரூபாயில் இருந்து, 6 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான காசோலைகளை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோவில்களின் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும்
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை
-
ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு ராகுலுக்கு அமைச்சர் கேள்வி
-
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான சூறை