மக்காச்சோளம் சாகுபடிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வேளாண் பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்பு

சென்னை:'தமிழக அரசு, மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்க ஒதுக்கும் நிதியை, வரும் பட்ஜெட்டில் அதிகரிக்க வேண்டும்' என்பது, விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம், பெரம்பலுார், அரியலுார், தேனி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
சத்து பானங்கள் தயாரிப்பு, கோழி தீவனம் ஆகியவற்றுக்கு மட்டுமே, முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது எத்தனால் தயாரிப்புக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது.
செலவு குறைவு
தமிழகத்தில், ஆண்டுக்கு 13 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தியாகிறது. இதனால் ஆண்டுக்கு 20 லட்சம் டன் தேவைப்படுகிறது. எனவே, அண்டை மாநிலங்களில் இருந்து, மக்காச்சோளம் வாங்கப்படுகிறது. நாட்டின் மக்காச்சோளம் உற்பத்தியில், கர்நாடகா முதல் இடத்திலும், மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்திலும், மஹாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளது. தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்தஉற்பத்தியில், தமிழகத்தில் 3 சதவீதம் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் உற்பத்தியாகும் மக்காச்சோளத்தில், 70 சதவீதம் கோழிப் பண்ணைகளுக்கும், 10 சதவீதம் ஸ்டார்ச் தயாரிக்கவும் செல்கிறது. பொதுமக்கள் உணவு பயன்பாட்டுக்கு, 10 சதவீதம் தேவைப்படுகிறது.
மக்காச்சோளம் பற்றாக்குறை காரணமாக, கோழி தீவனம் விலை உயர்கிறது. இதன் தாக்கத்தால், இறைச்சி கோழி, முட்டை விலை உயர்கிறது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
மற்ற பயிர்களை ஒப்பிடுகையில், மக்காச்சோளம் சாகுபடிக்கு கூலியாட்கள் தேவை குறைவு. மேலும், 100 நாட்களில் நல்ல வருமானம் கிடைக்கும். நீர் தேவையும் குறைவு; வாரத்திற்கு இரண்டு முறை பாசனம் செய்தால், உரிய மகசூலை எடுத்துவிடலாம். தமிழகத்தில் மக்காச்சோளத்தில் இருந்து, எத்தனால் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.
வரும் காலங்களில், எத்தனால் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஆண்டுதோறும் மக்காச்சோளம் தேவை அதிகரிக்கும். கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில், மக்காச்சோளம் உற்பத்திக்கு, 30 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்வாயிலாக மக்காச்சோளம் சாகுபடி ஊக்குவிக்கப்பட்டது.
விவசாயிகள் ஆர்வம்
தேவை அதிகரித்துள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, பட்ஜெட்டில் மக்காச்சோளம் சாகுபடிக்கு கூடுதல் நிதியும், சிறப்பு திட்டங்களையும் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜெ.ஆஞ்சநேயலு கூறியதாவது:
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில், முன்பு விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டனர். விளைந்த பொருளை எங்கு விற்பனை செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டதால், சாகுபடி பரப்பு படிப்படியாக குறைந்தது.
தற்போது எத்தனால் தயாரிப்பு ஆலைகள், கோழி தீவன ஆலைகள் நடத்துவோர், நேரடியாக விவசாயிகளின் வயல்களுக்கு வந்து, மக்காச்சோளம் கொள்முதல் செய்கின்றனர். எனவே, மக்காச்சோளம் பயிரிட விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
விவசாயிகளுக்கு தரமான மக்காச்சோளம்விதை கிடைப்பதில்லை. இதனால் உற்பத்தி திறன் குறையும். மக்காச்சோளம் உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்க, வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஞ்சாப் போன்ற மாநிலங்களில், ஒரு போகம் நெல், அடுத்த போகம் மக்காச்சோளம் என மாற்றி பயிரிடுகின்றனர். நெல்லை விட மக்காச்சோளத்திற்கு, குறைவான தண்ணீர் போதும்.
தரம் குறையாது
நெல், மக்காச்சோளம் போன்றவற்றை மாற்றி பயிரிடும்போது, மண்ணின் தரம் குறையாது. இதை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து, மக்காச்சோளம் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். அதற்கேற்ப, திட்டங்களையும் அறிவிக்க வேண்டும்.
மக்காச்சோளம் அறுவடை இயந்திரங்களை, வேளாண் துறை வாங்கி, குறைந்த வாடகைக்கு வழங்க வேண்டும். உலர்களங்கள் அமைத்து தர வேண்டும்.
இது குறித்து, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத்தில், அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை
-
ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு ராகுலுக்கு அமைச்சர் கேள்வி
-
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான சூறை