கொட்டிவாக்கம் அரசு பள்ளிக்கு 2 பஸ் சேவை துவக்கி வைப்பு

சென்னை,ஓ.எம்.ஆர்., கொட்டிவாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில், 930 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பெரும்பாலானோர், கண்ணகி நகர், கல்லுக்குட்டை பகுதியில் இருந்து வருகின்றனர்.

ஷேர் ஆட்டோ, சைக்கிள் மற்றும் நடந்தும் பள்ளி செல்கின்றனர். உரிய பேருந்து வசதி இல்லாததால், பலர் காலதாமதமாக சென்று வந்தனர்.

இதனால், காலை, மாலை நேரங்களில், பேருந்துகள் இயக்க வேண்டும் என, மாணவ - மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ஒரு பேருந்து மற்றும் ஒரு மினி பேருந்து என, இரண்டு பேருந்துகளை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் சென்னை மாநகர போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பஸ்கள் இயங்கும் நேரம்

பேருந்து: கண்ணகி நகரில் இருந்து பள்ளிக்கு, காலை 8:30 மணிக்கு புறப்படும். பள்ளியில் இருந்து கண்ணகி நகருக்கு, மாலை 3:30 மணிக்கு புறப்படும்.

மினி பேருந்து: கல்லுக்குட்டையில் இருந்து பள்ளிக்கு, காலை 8:30 மணிக்கு புறப்படும். பள்ளியில் இருந்து கல்லுக்குட்டைக்கு, மாலை 3:30 மணிக்கு புறப்படும்.

Advertisement