சமூக நலக்கூடம் இடிக்க முடிவு முன்பதிவு செய்தோர் அதிருப்தி

சென்னை, அண்ணாநகர் மண்டலம், 108 வது வார்டு, சேத்துப்பட்டு சத்தியமூர்த்தி சாலையில் சமூக நலக்கூடம் உள்ளது. இங்கு, எழும்பூரைச் சேர்ந்த அரவிந்த்ராஜ், 43 என்பவர், மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடத்த, இம்மாதம் 20ம் தேதி மாநகராட்சிக்கு, 3,550 ரூபாயை செலுத்தி முன்பதிவு செய்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அரவிந்த்ராஜை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய மாநகராட்சி வருவாய் துறை அதிகாரி, 'சமூக நலக்கூடத்தை இடிக்கப்போகிறோம்; விழாவை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள்' என, கூறியுள்ளார்.

ஏற்கனவே விழாவிற்கு பத்திரிகை வைத்து உறவினர்களை அழைத்துள்ள நிலையில், என்ன செய்வதுஎன தெரியாமல், அரவிந்த்ராஜ் அதிருப்தியில் உள்ளார். இதேபோல் முன்பதிவு செய்திருந்த பலரையும், அதிகாரிகள் இடமாற்ற வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'பொறியாளர் துறைக்கும், வருவாய் துறைக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில் உள்ள குறைபாடு தான் இதற்கு காரணம்' என்றார்.

Advertisement