வளசையில் அனைத்து பணிகளுக்கும் மீட்டருக்கு காசு மக்கள் பாதிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டலகுழு கூட்டம், மண்டல குழு தலைவர் ராஜன் தலைமையில், வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடந்தது.

மண்டல உதவி கமிஷனர் உமாபதி, செயற்பொறியாளர்கள் பானுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் பங்கேற்று, நிறைவேற்றப்பட்ட 35 தீர்மானங்கள் குறித்தும், வார்டின் அடிப்படை தேவைகள் குறித்தும் பேசினர்.

கவுன்சிலர்கள் பேசியதாவது:

கிரிதரன், 148வது வார்டு அ.ம.மு.க., கவுன்சிலர்: குடிநீர் வாரியம் சார்பில் கழிவுநீர் மற்றும் குடிநீர் வீட்டு இணைப்புகளுக்கு 24,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ஒரு மீட்டருக்கு 4,900 ரூபாய் என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் சிரமப்படுகின்றனர். பழைய திட்டத்தின்படி, கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெற்குன்றம் பகுதி கோயம்பேடு துணை மின் நிலையத்தின் கீழ் வருகிறது. இங்கு, 40க்கும் மேற்பட்ட மின் கம்பங்களை மாற்ற வேண்டியுள்ளது.

மந்த அதிகாரிகள்



அப்பகுதி மின் வாரிய துறை மந்தமாக செயல்படுகிறது. நெற்குன்றம் 145வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 150 புறநோயாளிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால், கடந்த பல மாதங்களாக அங்கு மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது.

சத்யநாதன், 145வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: குடிநீர் வாரியம் சார்பில் சாலை வெட்டு பணிகள் மேற்கொண்ட பின், சாலையை முறையாக சீர் செய்வதில்லை. இதனால், இரண்டு ஆண்டுகளே ஆன புது சாலை, படுமோசமாக மாறி விடுகிறது.

கோயம்பேடு, மின் வாரிய துறையைச் சேர்ந்த அதிகாரிகள் முறையாக வேலை செய்வதில்லை; மந்தமாக செயல்படுகின்றனர். உடைந்த மின் கம்பங்கள் மற்றும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க, பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தால் மீட்டர் வழங்க பல மாதங்களாகின்றன. நெற்குன்றத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது.

நெற்குன்றம் வள்ளியம்மை நகரில், மாநகராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு துவங்கப்பட்ட கழிப்பறை பணிகளை, ஏன் மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர்?

வள்ளியம்மை தெரு கழிவுநீர் உந்து நிலைய பணியால், வார்டில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்து விடுகிறது. மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடப்படுகிறது.

பாரதி, 152வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: வளசரவாக்கம், கடம்பன் தெருவில், கழிவுநீர் உந்து நிலையம் அருகே உடைந்த குழாய் சீரமைக்கும் பணிகள், பல மாதங்களாக நடக்கின்றன. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

நடுத்தர மக்கள் அவதி



அதேபோல், வார்டில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக குழாய் பதிக்கப்பட்டன. ஆனால், இன்னும் குடிநீர் வழங்கப்படவில்லை. விரைவில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

சவுத்ரி நகரில் உள்ள விளையாட்டு திடலில் உள்ள மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும். மின் வாரியத்துறையினர் எந்த அறிவிப்பும் இன்றி சாலை வெட்டு பணிகளை மேற்கொள்கின்றனர். அதை முறையாக சீர் செய்வதில்லை.

செல்வகுமார், 154வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: ராமாபுரம், சாந்தி நகர் பிரதான சலையில் மின் வாரியம் சார்பில் புது துணை மின் நிலையத்திற்காக, மின் கேபிள் பதிக்கும் பணிகள் நடக்கின்றன.

இதனால், சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது. அதை போக்குவரத்திற்கு ஏதுவாக சீர் செய்ய வேண்டும். அதேபோல, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற சாலை வெட்டு கட்டணம், 24,000 ரூபாயில் இருந்து மீட்டர் கணக்கில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நடுத்தர மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement