வக்பு வாரிய மசோதா திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி,வக்பு வாரிய மசோதாவில், கூட்டுக்குழு பரிந்துரை செய்த 23 திருத்தங்களில், 14 திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக, வக்பு வாரிய திருத்த மசோதா கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது.

பரிந்துரை

இது, ஒருதலைபட்சமானது என்றும், முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும் கூறி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, அந்த மசோதா பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி., ஜகதாம்பிகா பால் தலைமையிலான பார்லி., கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

மசோதாவில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து விவாதித்த கூட்டுக்குழு, 67 திருத்தங்களை செய்ய பரிந்துரைத்தது.

இதில், எதிர்க்கட்சிகள் வழங்கிய, 44 திருத்தங்களை கூட்டுக்குழு நிராகரித்தது. பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் வழங்கிய, 23 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து, கூட்டுக்குழு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

கடந்த, 13ம் தேதி நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், இரு சபைகளிலும் கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்பார்ப்பு

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், வக்பு வாரிய மசோதா குறித்த கூட்டுக்குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, 23 திருத்தங்களில், 14 திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10ம் தேதி துவங்குகிறது. அப்போது, வக்பு வாரிய திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement