காஞ்சி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை உற்சவம் விமரிசை

காஞ்சிபுரம்,:பெரிய காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் பின்புறம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவத்தையொட்டி, கடந்த 23ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமமும் மற்றும் பந்தக்கால் விழாவும் நடந்தது.

மஹாசிவராத்திரியான நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து சிவலிங்க பூஜையுடன் அம்மன் வீதியுலா நடந்தது.

நேற்று மாலை 3:30 மணிக்கு, சகல மேள வாத்தியங்களுடன் சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி கிழக்கு ராஜ வீதி, புத்தேரி தெரு வழியாக சென்று, சர்வதீர்த்தம் அடுத்த மயானத்தில், மயானகொள்ளை உற்சவம் நடந்தது.

விழாவில், திரளான பக்தர்கள் பல்வேறு வடிவ காளி வேடம் அணிந்தும், உடலில் எலுமிச்சை பழம் குத்தியும், வாயில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காஞ்சி வீரசிலம்பம் பயற்சி பள்ளி மாணவர்களின் தீப்பந்தம் ஏந்தி பல்வேறு சாகசம் நிகழ்த்தினர். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேர்த்திக்கடனாக காய்கறிகள், பழவகைகள், கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை சூறைவிட்டனர்

இன்று இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், கும்பம் படையலிடப்படுகிறது. மார்ச் 1ம் தேதி காலை, 7:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் பருவதராஜகுல மீனவ சமூகத்தினர் செய்து வருகின்றனர்.

சின்ன காஞ்சிபுரம்



சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சிநம்பி தெருவில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம் நேற்று நடந்தது.

உற்சவத்தையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு மஹா அபிேஷகமும், 9:00 மணிக்கு சின்ன வேப்பங்குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டுதலும், மாலை 4:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காளம்மன் வீதியுலாவாக சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி மயானம் சென்றார். அங்கு மயான சூறை நடந்தது.

சிறுகாவேரிபாக்கம்



காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் மங்கல நாயகி உடனுறை மாசிலாமணீஸ்வரர் மற்றும் ஜெகதீஸ்வரி மாரியம்மன், மஹா காளியம்மன் கோவிலில் மயான கொள்ளை விழாவையொட்டி நேற்று காலை 9:00 மணி முதல், 10:30 மணி வரை, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு அம்மனுக்கு படையலிடப்பட்டது.

ஓரிக்கை



காஞ்சிபுரம் மாநகராட்சி 50வது வார்டு, ஓரிக்கை சர்வோதயா நகர், அங்காள பரமேஸ்வரி மற்றும் பச்சையம்மன் கோவிலில் கடந்த 23ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. 24ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கடந்த 26ம் தேதி உதயாங்குளம் குளக்கரை மாரியம்மன் கோவிலில் இருந்து அக்னி தீச்சட்டி ஏந்திய பக்தர்கள் பச்சையம்மன் கோவிலுக்கு வந்தனர். நேற்று முன்தினம் இரவு மஹாசிவராத்திரியும், மயான கொள்ளை உற்சவமும் நடந்தது.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாத்துார் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், மயான கொள்ளை திருவிழா இம்மாதம் 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 25ம் தேதி இரவு காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், பூக்குழி இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, பூ கரக புறப்பாடு, மகா அபிஷேகம் நடந்தன.

நேற்று காலை, அம்மனுக்கு 108 பால் குடம் அபிஷேகத்தை தொடந்து, காளி வேடமணிந்த பக்தர், சுடுகாடு பகுதியில் அமைக்கப்பட்ட சூரனை வதம் செய்தார். இரவு, அம்மன் தேர் வீதி உலா நடந்தது. இதில், கிராம மக்கள் திரளானோர் பங்கேற்று அம்மனை வணங்கினர்.

Advertisement