அடுத்தடுத்து 3 பேரை காரில் கடத்தி நகை, பணம் பறித்த 7 பேர் சிக்கினர்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேரை காரில் கடத்தி நகை, பணம் பறித்த ஏழு பேரை நேற்று போலீசார் கைது செய்து சிறயைில் அடைத்தனர்.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆகாஷ் குப்தா, 25. ஒரகடத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் எம்.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 22 ம் தேதி இரவு 8 மணிக்கு, ஒரகடம் மெர்கூரி உணவகம் அருகே உள்ள டீக்கடைக்கு சென்று, மீண்டும் கல்லுாரி வளாகத்தில் உள்ள அறைக்கு திரும்பினார்.

ஒரகடம் ஜங்சன் அருகே வந்தபோது, காரில் வந்த மூவர், ஆகாஷ் குப்தாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர். இதையடுத்து, காரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஆகாஷ் குப்தாவின் கழுத்தில் வைத்து பணம் கேட்டு மிரட்டினர்.

பணம் இல்லை என்று தெரிவித்த ஆகாஷ் குப்தாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, அவரிடமிருந்த ஏ.டி.எம்., கார்டை பிடுங்கி, பாஸ்வேர்டு நம்பர் கேட்டு மிரட்டி, அவரை காரில் தேவரியம்பாக்கம் அழைத்து சென்று, ஏ.டி.எம்., ல் 15,000 ரூபாய் எடுத்துள்ளனர். பின் அவர் அணிந்திருந்த 9 கிராம் எடையுள்ள 2 மோதிரங்களை பறித்து அங்கிருந்து தப்பினர்.

அவர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த ஆகாஷ் குப்தா நண்பர்கள் உதவியுடன் மாத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே கும்பல், ராணிப்பேட்டை மாவட்டம், மேல்நெல்லி மாவட்டத்தை சேர்ந்த சிவா, 24. ஒரகடம் அருகே, பண்ருட்டியில் உள்ள தனியார் கேன்டீனில் மாஸ்டராக வேலைசெய்து வருகிறார். கடந்த 21 ம் தேதி, பண்ருட்டி பெட்ரோல் பங்க் அருகே நின்றுகொண்டிருந்த போது, காரில் வந்த மூவர், சிவாவை பிடித்து காரில் ஏற்றி, கத்தியை காட்டி மிரட்டி 4 கிராம் செயின், 17,000 ரூபாய் பறித்து, சிறிது துாரம் சென்று இறக்கி விட்டு சென்றனர்.

அதே கும்பல் அன்றிரவு 10:30 மணிக்கு, தெரோசாபுரம் அருகே நடந்து சென்ற, வல்லம் - வடகால் சிக்காட் உதவியாளரான நாகரத்தினம் என்பவரை காரில் கடத்தி, சரமாரியாக தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ஜிபே வாயிலாக 2,000 ரூபாயை பறித்து தப்பினர்.

இது குறித்த புகாரின் படி ஒரகடம் போலீசார் விசாரித்து, கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் வாலாஜாபாத் அருகே, ஆம்பாக்கம் கிராமத்தில் தங்கி, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் நபர்களை காரில் கடத்தி, தொடர் கொள்ளையில் சிலர் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி திருநெல்வேலி பகுதியை சேர்ந்த முத்துராஜா, 21, பிரதீப், 23, உதயகுமார், 23, குருநாதன், 23, பரசுராமன், 23, மாரிச்செல்வம், 23, சுபாஷ், 23, ஆகிய ஏழு பேரை போலீசார் நேற்று கைது செய்து ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement