தாட்கோ டிராக்டருக்கு மானியம் வழங்குவதில்லை: விவசாயிகள் புகார்

திண்டுக்கல்:தாட்கோ மூலம் வாங்கப்படும் டிராக்டர்களுக்கு மானியம் வழங்குவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கும் நிலையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் தற்காலிகமாக மானியம் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு கறவைமாடுகள் வளர்த்தல், ஆட்டோ, டிராக்டர், பெட்ரோல் பங்க் வைத்தல் உள்ளிட்டவைக்கு மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களுக்கு நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதில் இடைத்தரர்கள் ஆதிக்கம் அதிகமிருப்பதால் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் டிராக்டருக்கு மானியம் வழங்கப்படுவதில்லை எனவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது: டிராக்டர் நிறுவனங்கள் மூலம் தாட்கோ அலுவலகத்தில் பதிவு செய்து நேர்காணல் சென்று வந்தோம். சம்பந்தப்பட்ட டிராக்டர் நிறுவனங்கள் தனியார் வங்கிகளிடம் முழுத்தொகையையும் பெற்று டிராக்டர் வழங்கினர். மானியம் வழங்குவதற்கு முன்பே ஒரு டிராக்டருக்கு ரூ.30 ஆயிரம் வரை வாங்கி விடுகின்றனர். டிராக்டருக்கு மானியத்தொகையாக ரூ.2.25 லட்சம் வரை வழங்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. கடன் வழங்கிய வங்கிகள் ஒரு மாதம் தவணை கட்டவில்லையென்றாலும் டிராக்டரை ஜப்தி செய்கின்றனர். அதனை மீட்க ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டியுள்ளது. மானியத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தாட்கோ மாவட்ட மேலாளர் முத்துச்செல்வி கூறியதாவது:


டிராக்டர் மானியத்திற்கு டீலர்கள் தலையீடு, விவசாயி பெயரில் பதியப்பட்டு டிராக்டர் வேறு ஒருவருக்கு செல்கிறது உட்பட பல்வேறு புகார்கள் உள்ளன. இதனால் மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மானியத்தொகை வந்தபின் டிராக்டரை எடுங்கள் என நேர்காணல் வரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் அவர்கள் டிராக்டரை எடுத்து விடுகின்றனர்.


இடைத்தரர்கள் பேச்சை விவசாயிகள் நம்பிவிடுகின்றனர். தாட்கோவிலிருந்து அனைத்து விவரங்களை தெளிவாக எடுத்துரைத்தும் விவசாயிகள் பின்பற்றுவதில்லை. இதனால் இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை தடுக்க ஆர்.சி., சான்றிதழில் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு வரன்முறைகள் கொடுக்கப்பட்டு மீண்டும் டிராக்டர் மானியம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நேரடியாக தாட்கோவிற்கு வந்து விவரங்களை தெரிவித்து சரி செய்யலாம் என்றார்.

Advertisement