மத்திய, மாநில அரசுகளின் விவசாய திட்டங்களில் நம்பிக்கை இல்லை காங்., எம்.பி., கார்த்தி பேச்சு

காரைக்குடி,:''விவசாயிகளுக்கான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் நம்பிக்கை இல்லை. அரசின் விவசாய திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதில்லை,'' என, சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாவில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.

வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன் வரவேற்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தொழில்நுட்ப பிரசுரங்களை வெளியிட்டார்.

கார்த்தி எம்.பி., விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: விவசாயத்தில் இந்தியா முதன்மையான நாடு. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை கண்டுபிடித்துள்ளோம். இன்று தெருவில் ஓடும் சாக்கடையை சரி செய்ய முடியவில்லை. குறைந்த செலவில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புகிறது இஸ்ரோ. விஞ்ஞானத்தில் இந்தியா வளர்ந்திருந்தாலும் கழிவுநீரை மனிதர்கள் தான் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. ரோடு ஒரு மழைக்கு கூட தாங்குவதில்லை.

இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகள் பலர் உள்ளனர். ஆனால் இந்த விஞ்ஞானம் கீழ்தட்டு விவசாயிகளை சென்றடைவதில்லை. மழை பெய்தால் மழை நிவாரணம். மழை பெய்யாவிட்டால் வறட்சி நிவாரணம். மழை நீரை தேக்கி வைக்க விஞ்ஞானம் இல்லை. நடைமுறை வாழ்க்கைக்கும் விஞ்ஞானத்திற்கும் இடைவெளி உள்ளது. விவசாயத்தில் விஞ்ஞானம் சாத்தியமாகும். விஞ்ஞானத்திற்கும் விவசாயத்திற்கும் தொடர்பு ஏற்பட புதிய புரட்சி வேண்டும். இந்தியாவில் ஐ.ஐ.டி., படித்த ஒருவர் எப்போது விவசாயத்திற்கு வருகிறாரோ அன்று தான் விவசாய புரட்சி உண்டாகும். இன்றைய அரசியலில் ஆக்கபூர்வமான விஷயம் பேசுவதில்லை. இந்த அரசியலுக்கு நான் பொருத்தமானவனா என்று எனக்கு சந்தேகம் உள்ளது.

ஆக்கபூர்வமான மாற்றம் வரவேண்டும் என்றால் விஞ்ஞான பூர்வ விவசாயம் வரவேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்றார்.

Advertisement