சாலையோரம் குவிக்கப்படும் கரும்பால் வாகன ஓட்டிகள் அவதி

பள்ளிப்பட்டு,:பள்ளிப்பட்டு ஒன்றியத்தில், கரும்பு அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு பயிரிடப்படும் கரும்புகள், தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கரும்பு தோட்டங்களில் அறுவடை செய்யப்படும் கரும்பு கட்டுகள், மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்கள் வாயிலில் இருந்து மாநில நெடுஞ்சாலைக்கு கொண்டு வரப்படுகின்றன.

அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்படும் கரும்பு கட்டுகள், லாரிகளில் ஏற்றி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. லாரிகள் தொடர்ந்து கிடைக்காத நிலையில், சில நாட்கள் வரை சாலையோரத்தில் கரும்பு கட்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், இந்த வழியாக பயணிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் இதனால் அவதிப்பட்டு வருகின்றனர்.

கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும் பள்ளிப்பட்டு பகுதியில் கரும்புகளை பாதுகாத்து லாரிகளில் ஏற்றி அனுப்ப வசதியாக களங்களை ஏற்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement