குமரியில் சூறை காற்று: வீடுகள் சேதம்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறாவளி வீசி வருவதால் மலையோர கிராமங்களில் வீட்டு கூரைகள் காற்றில் பறக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் வாழை உள்ளிட்ட பயிர்கள் மண்ணில் சாய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பேச்சிப்பாறை அணையை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பழங்குடி இன மக்கள் சிறிய அளவிலான வீடுகளை கட்டி அதில் கூரையாக தகர ஷீட்டுகளை அமைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கடுமையாக வீசிய சூறாவளி வீடுகளின் கூரைகளை பெயர்த்து சென்றது. இதனால் வீட்டை விட்டு வெளியே வந்த மக்கள் இரவு முழுவதும் துாங்காமல் இருந்தனர். மாவட்டத்தில் கடுமையான வெயில் அடித்து வருவதால் காடுகளில் வெள்ளம் குறைந்துவிட்டது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடிநீருக்காக கிராமங்களுக்குள் வந்து கொண்டிருப்பதால் இரவு முழுவதும் மக்கள் தீ மூட்டி விழித்திருந்தனர்.
வனவிலங்குகள் வருவதை தடுப்பதற்காக தகர ஷீட்டுகளால் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகளும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.