நன்றி தெரிவிக்க வந்த காங்., எம்.பி.யிடம் பகுதிவாசிகள் சராமரி குற்றச்சாட்டு

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளேரிதாங்கல், வெங்கத்துார், பாப்பரம்பாக்கம், கொப்பூர் உட்பட பல பகுதிகளில், நேற்று திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் நன்றி தெரிவித்தார்.
வெள்ளேரிதாங்கல் ஊராட்சியில், அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்தவர்கள், அங்கன்வாடி மையம் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் திறப்பதாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, எம்.பி.,யிடம், கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் கூறுகையில், ''அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும், விரைவில் பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தெரிவித்தார்.
இதையடுத்து, எம்.பி., அங்கன்வாடி மையம் தினமும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார்.
பின், அப்பகுதியில் கூடியிருந்த பகுதிவாசிகளிடம் வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
அப்போது, அங்கிருந்தவர்கள் 100 நாள் திட்டத்திற்கு, மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும், நுாறு நாள் பணி முறையாக தருவதில்லை எனவும், குற்றம் சாட்டினர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பதிலளித்த எம்.பி., 'மத்திய அரசிடம், நுாறு நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க நிதி கேட்டு தமிழக அரசுடன் சேர்ந்து, எம்.பி.யாக நானும் கோரிக்கை வைத்துள்ளேன். இன்னும் 10 தினங்களில் துவங்க உள்ள பார்லிமென்ட் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
பின், பாப்பரம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தை ஆய்வு செய்து ஊராட்சியில் அடிப்படை தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.
அதை தொடர்ந்து, அப்பகுதியில் நடந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பங்கேற்ற பகுதிவாசிகள் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு வைத்தனர். மேலும், விளையாட்டு மைதானம், குடிநீர் தொட்டி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
இதற்கு பதிலளித்த எம்.பி., அருகிலிருந்து கடம்பத்துார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமாரிடம், 'சுகாதாரத் துறை வாயிலாக நீர்த்தேக்க தொட்டிகளை சீரமைத்து துாய்மையான குடிநீர் வழங்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.
இதில், கடம்பத்துார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.ஜி.எஸ்.சிதம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பின், கொப்பூர், இலுப்பூர், வலசைவெட்டிக்காடு, போளிவாக்கம், மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார், அதிகத்துார், ஏகாட்டரூர் ஆகிய பகுதிகளிலும், எம்.பி., சசிகாந்த் செந்தில் ஒட்டளித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார்.