பழவேற்காடு ஏரி பால சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் வலுவிழக்கும் அபாயம்

பழவேற்காடு:பழவேற்காடு கடற்கரை பகுதியை ஒட்டி லைட்அவுஸ், அரங்கம்குப்பம், வைரன்குப்பம் உள்ளிட்ட, 15 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு, 30,000க்கும் அதிகமான மீனவ மக்கள் வசிக்கின்றனர்.
மேற்கண்ட கிராமங்களுக்கும், பஜார் பகுதிக்கும் இடையே, பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரி அமைந்து உள்ளது. மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசதிய தேவைகளுக்கு, பழவேற்காடு பஜார் பகுதிக்கு வந்து செல்ல வேண்டும்.
மீனவ மக்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, 2010ல் ஏரியின் குறுக்கே, 17.15 கோடி ரூபாயில் உயர்மட்டம் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை, 15 மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
காட்டுப்பள்ளியில் செயல்படும் துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளம், அத்திப்பட்டில் உள்ள அனல் மின்நிலையங்களில் பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் இந்த பாலத்தின் வழியாக பயணிக்கின்றனர்.
இந்நிலையில், தொடர் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாமல் பாலம் அதன் உறுதிதன்மையை இழந்து வருகிறது. பாலத்தின் சுவர்களில் செடிகள் வளர்ந்து உள்ளன. இவை, பாலத்தின் உறுதிதன்மையை கேள்விக்குறியாக்கி, பலவீனப்படுத்தும்.
மேலும், இணைப்பு சாலையின் சரிவு பகுதிகள் சேதம் அடைந்து உள்ளன. ஓடு பாதையின் இருபுறமும் மணல் குவிந்து கிடக்கிறது. மின்விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் பாலம் இருளில் மூழ்கி இருக்கிறது.
நீண்டகால கோரிக்கையின் பயனாக அமைந்த இந்த பாலத்தை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.