சிவன் கோவில்களில்  மகா சிவராத்திரி கோலாகலம்

திருவள்ளூர் மாவட்டம் முழுதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் முதல், நேற்று காலை வரை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்விழித்து தரிசனம் செய்தனர்.

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் சிவராத்திரியையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில், மாலை 6:00 மணி முதல், நேற்று அதிகாலை 5:00 மணி வரை மூலவருக்கு நான்கு கால பூஜைகள் மற்றும் பல்வேறு குழுவினரின் பரத நாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில், 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை வழிப்பட்டனர்.

ஆர்.கே.பேட்டை

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தில், ராசபாளையம் கிராமத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு, விநாயகர், முருகர் என, பஞ்சமூர்த்திகள் ஒரே சிலையில் அருள்பாலிக்கும் பால குருநாதீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில், சிவராத்திரியையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை முதல், நேற்று காலை வரை தொடர்ந்து பல்வேறு அபிஷேகம் அலங்காரம் நடத்தப்பட்டன.

இதில், ராசபாளையம், பாலசமுத்திரம், பல்ஜி கண்டிகை, அம்மையார் குப்பம், அத்திமாஞ்சேரி பேட்டை, ஆர்.கே. பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டை அடுத்த, சென்னங்காரணி கிராமத்தில் உண்ணாமலையம்மை சமேத அண்ணாமலையார் கோவிலில், சிவராத்திர விழாவையொட்டி தீமிதி திருவிழா நடந்தது. கடந்த 16ம் தேதி முதல், தினமும் மூலவர்களுக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவு, காப்பு கட்டிய, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்தனர். பின் உற்சவர் சிவபெருமான், பார்வதி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஊத்துக்கோட்டை திருநீலகண்டேஸ்வரர், தாராட்சி பரதீஸ்வரர், வடதில்லை பாபஹரேஸ்வரர், லட்சிவாக்கம் ஆழீஸ்வரர், காரணி காரணீஸ்வரர், சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை நான்கு கால அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் வாசீஸ்வரசுவாமி கோவிலில், நேற்று முன்தினம் சிவராத்திரியையொட்டி இரவு 11:00 மணி முதல், நேற்று காலை வரை நான்கு கால பூஜை நடந்தது.

திருத்தணி

திருத்தணி அடுத்த, தாடூர் கடலீஸ்வரர் சுவாமி கோவிலில், மகா சிவராத்திரியையொட்டி நேற்று முன்தினம், 108 பால்குட ஊர்வலம் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது.

இரவு முதல், நேற்று காலை வரை மூலவருக்கு ஆறு கால பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு முழுதும் மாணவியர் பரத நாட்டியம் மற்றும் பஜனைக்குழுவினரின் பக்தி பாடல்கள் பாடப்பட்டன.

பரத நடனமாடியவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், தாடூர், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவு முழுதும் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டனர்.

- நமது நிருபர் குழு -

Advertisement